செயற்கை முன்னங்கால்கள் பொருத்தப்பட்ட உலகின் முதல் அணில் இதுதான்! (விடியோ)

துருக்கியில் கால்களை இழந்த அணிலுக்கு முன்பகுதியில் சக்கரத்தை பொறுத்தி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
செயற்கை முன்னங்கால்கள் பொருத்தப்பட்ட உலகின் முதல் அணில் இதுதான்! (விடியோ)

துருக்கியில் கால்களை இழந்த அணிலுக்கு முன்பகுதியில் சக்கரத்தை பொறுத்தி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். ஜீவகாருண்யம் என்பது இதுதான் என்பதை  உலகிற்கு அந்த மருத்துவ குழு நிருபித்துள்ளது. 

துருக்கியில் பேட்மான் (Batman) எனும் ஊரில் கடந்த மாதம் வன விலங்குகளைப் பிடிக்க அமைக்கப்பட்டிருந்த பொறியில் அணில் ஒன்று சிக்கித் தவித்தது. பலத்த காயமடைந்த அதனை உடனே கால்நடைப் பராமரிப்பு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். காரமெல் என்று அந்த அணிலுக்குப் பெயரிட்டு தொடர் அறுவை சிகிச்சைகள் செய்து அதன் உயிரைக் காப்பாற்றினார்கள் மருத்துவர்கள். ஆனால் பரிதாபகரமாக அணிலின் இரண்டு முன்னங்கால்கள் அகற்றப்பட்டுவிட்டது.  

அணில் என்றாலே துறு துறுப்புடன் ஓடித் திரியும் ஜீவன். ஆனால் காரமெல் நடக்க முடியாமல் ஒரே இடத்தில் முடங்கிக் கிடந்தது. பிராணிகள் மீது பேரன்பு கொண்ட இஸ்தான்புல் ஐதின் பல்கலைக்கலைக்கழகத்தைச் சேர்ந்த கனிணி பொறியாளர் ஒருவரின் வேண்டுகோளுக்கு இணங்க மருத்துவர்கள் அதை குணப்படுத்த முயற்சியில் இறங்கினார்கள். டெஃபன் டிமிர் தலைமையில் ஒரு மருத்துவ குழு உருவானது. அதில் மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர் முஸ்தபா குல்டிகின், டாக்டர் டொல்கே சடானா மற்றும் எய்லெம் க்யூகக் ஆகியோர் காரமாலின் முன் கால்களுக்குப் பதில் சக்கரத்தைப் பொறுத்தினர். 

அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்த நிலையில் காரமலுக்கு ஒரே குஷி. தன் புதிய சக்கர முன்னங்கால்களின் உதவியுடன் அது விடப்பட்டிருந்த செவ்வக வளாகத்தை சுற்றி வந்தது. இது குறித்து டெமிர் கூறுகையில், ‘ என்னிடமும் ஒரு அணில் இருக்கிறது. அது அடிபட்டு கிடந்த போது காப்பாற்றி வளர்த்து வருகிறேன்.

புதிதாக வேட்டையாட கற்றுக் கொள்வோரின் முதல் இலக்கு அணில்கள் தான். சட்டப்படி அணில்களை கொல்வது தவறு என்று தெரிந்தும் ஏனோ அதனை கொன்று அல்லது காயப்படுத்திவிடுகிறார்கள். இப்படி அடிபட்டு கீழே விழுந்துவிட்ட அணில்கள் கவனிப்பாறின்றி இறந்துவிடுகின்றன. என்னிடம் இப்படித்தான் சின்னஞ் சிறிய அணிலொன்று வந்து சேர்ந்தது. அதன் பின் இதுபோன்ற அணில்களைப் பார்த்தால் எடுத்து வந்து வளர்ப்பேன். அவை சுதந்திரமாக என் வீட்டில் சுற்றிக் கொண்டிருக்கும். தேவைப்பட்டால் அவுட்டிங் சென்றுவிட்டு பத்திரமாக வீடு திரும்பும். அணில்களின் இயல்பு பற்றி எனக்குத் தெரிந்ததால், காரமல்லைப் பற்றிக் கேள்விப்பட்ட போது மனம் வருந்தினேன். அதை எப்படியாவது நடமாட வைத்துவிட வேண்டும் என்று தான் என் மருத்துவ குழுவினருடன் களமிறங்கினேன். இதோ அவன் இப்போது ஓரளவுக்கு சுற்றித் திரியும் அளவுக்கு முன்னேறியுள்ளான்.

பொறியில் சிக்கிய பின்னர் இது காரமெல்லுக்கு இரண்டாவது அறுவை சிகிச்சை. ஆறு மணி நேர ஆபரேஷனுக்குப் பிறகு காரமெல்லுக்கு இந்த செயற்கை சக்கரம் பொருத்தப்பட்டது. கடுமையான வலியைத் தாங்கிய அந்தச் சின்னஞ்சிறு பிராணி எப்படியோ மீண்டு வந்துவிட்டது. விரைவில் தன் உணவை தானே தேடிக் கொள்ளும் அளவுக்கு தெம்பு வந்துவிடும்’ என்றார் டாக்டர் டெமிர்.

காரமெல் உலகின் முதல் செயற்கை சக்கர முன்னங்கால்கள் பொருத்தப்பட்ட அணில் என்ற பெருமையை அடைகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com