நீங்கள் நின்று கொண்டிருக்கும் நிலத்துக்காவது தீங்கு செய்யாதீர்கள்! 

சுற்றுச் சூழல் தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, பூமியை பாதுகாக்கும் விதமாக ஆண்டுதோறும்
நீங்கள் நின்று கொண்டிருக்கும் நிலத்துக்காவது தீங்கு செய்யாதீர்கள்! 

சுற்றுச் சூழல் தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, பூமியை பாதுகாக்கும் விதமாக ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 22-ம் தேதி (இன்று) உலக பூமி தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த வழக்கம் அமெரிக்காவில் 1970-ம் ஆண்டு தொடங்கியது.  1990-களில் பூமி தினம் உலகம் முழுவதும் பிரபலமாகி, தற்போது குறைந்தபட்சமாக 192 நாடுகளில் கொண்டாடப்படுகிறது. 

நாம் வாழும் இந்த பூமியை, அதன் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தக் கூடிய ஒரு நாள் இது. கடந்த ஆண்டுகளில் இத்தினம் ‘அற்புதமான தண்ணீர் உலகம்’ , சுற்றுச்சூழல் மற்றும் பருவகால நிலை பற்றிய கல்வியறிவு போன்ற தலைப்புக்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டது இந்த ஆண்டு ப்ளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்ப்பதற்காகவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தவும் பூமி தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இக்கனவை நினைவாக்க உலக மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து முன் வர வேண்டும்.

உலகில் வாழும் அத்தனை உயிர்களுக்கும் உணவு உள்ளிட்ட வாழ்வாதாரத்தை அளித்துள்ளது பூமி. எனவே தான் அன்னை பூமி என்றும் மதர் எர்த் எனவும் உலக மக்கள் இந்த மண்ணின் மகத்துவத்தை உணர்ந்து போற்றுகிறார்கள். தமிழர்களின் பண்பாட்டில் பூமி பூஜை என்பது மிகவும் முக்கியம் வாய்ந்த ஒன்றாகும். இறைவனின் சன்னதிகளிலும், பெரியவர்களின் ஆசியை பெறுவதற்கும் சாஷ்டாங்கமாக பூமியில் விழுந்து கும்பிடுவது தமிழர் பழக்கம். 

சங்ககாலத்தில் ஐந்து வகை நிலங்களில் வாழ்ந்த பண்பட்ட சமூகம் நம்முடையது. ஆனால் நவீன வாழ்க்கை தொன்மத்திலிருந்து விலகிச் செல்வதை பார்க்கும் சமூகமாகவும் இன்று உள்ளது. பூமியை குடைந்தும், நிலத்தை அளவுக்கு மீறி அகழ்ந்தும், ஆழ்துளை கிணறுகளை உருவாக்கியும், ரசாயனம் தயாரித்தும், கணக்கில் அடங்கா ரசாயனக் கழிவுகளையும், பயோ வேஸ்ட்களையும் ப்ளாஸ்டிக் உள்ளிட்ட பலவிதமான குப்பைக் கூளங்களையும் பூமி முழுவதும் இறைத்து நாம் அனுதினமும் பலவிதமான கெடுதல்களை  இப்பூமிக்குச் செய்து கொண்டிருக்கிறோம். இயற்கைக்கு எதிரான மனிதனின் ஒவ்வொரு செயலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதே தவிர குறைந்தபாடில்லை. வருங்கால சந்ததியினருக்கு நாம் அளிக்கப் போவது இந்த மாசு நிறைந்த பூமியைத் தான் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

பூமியைப் பாதுகாப்பதே நம்மை பாதுகாக்க சிறந்த வழி என்பதை மறந்துவிட்டோம். அதனால் தான் இயற்கை பேரிடர்களை சந்திக்கிறோம். கடும் வெயில், பெரும் மழை, சூறைக்காற்று, சுனாமி, புயல் என்று திருப்பி அடிக்கிறது. ஆனால் அப்போது கூட மதிகெட்டுத் தான் அலைந்து கொண்டிருக்கிறான் மனிதன். இயற்கையை சிதைத்து சிறிது நாள் கூட மனிதன் வாழ முடியாது. இயற்கையுடன் இயைந்து, இயற்கைக்கு தலைவணங்கி வாழும் நம் பழைய வாழ்க்கைக்கு காலம் தாழ்த்தாமல் திரும்புதலே அழிவிலிருந்து தப்ப ஒரே வழி. இனி வரும் காலங்களிலாவது பிளாஸ்டிக் மற்றும் மண்ணில் மட்காத பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் தவிர்த்துவிட வேண்டும். இயற்கையின் மகத்துவத்தை உணர்ந்து அதன் சமநிலையைக் காக்க உறுதி கொள்ள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com