நாடாளுமன்ற எம்.பி ஆன ஒரு நாள் கிரிக்கெட் அணித் தலைவர்: வங்கதேச தேர்தல் சுவாரஸ்யம் 

ஞாயிறன்று நடைபெற்ற வங்கதேச பொதுத்தேர்தலில், அந்நாட்டு ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் அணித்தலைவரான  மஷ்ரபி பின் மோர்டாசா வெற்றி பெற்று, எம்.பியாகத் தேர்வு செய்ப்பட்டுள்ளார்.  
நாடாளுமன்ற எம்.பி ஆன ஒரு நாள் கிரிக்கெட் அணித் தலைவர்: வங்கதேச தேர்தல் சுவாரஸ்யம் 

டாக்கா: ஞாயிறன்று நடைபெற்ற வங்கதேச பொதுத்தேர்தலில், அந்நாட்டு ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் அணித்தலைவரான மஷ்ரபி பின் மோர்டாசா வெற்றி பெற்று, எம்.பியாகத் தேர்வு செய்ப்பட்டுள்ளார்.  

வங்கதேச நாடாளுமன்றத்தில் உள்ள 300 இடங்களில் 299 இடங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை தேர்தல் நடைபெற்றது. காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடத்தப்பட்டது.

டாக்காவில் வாக்குச்சாவடி ஒன்றில் முதல் வாக்காளராக வந்து பிரதமர் ஷேக் ஹசீனா தனது வாக்கைப் பதிவு செய்தார். அப்போது அவர் அளித்த பேட்டியில், "தேர்தல்களில் எங்களுக்கு வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு எப்போதும் உண்டு. மக்கள் மீது நான் நம்பிக்கை வைத்துள்ளேன். தங்களது சிறப்பான எதிர்காலத்துக்கு எங்களையே மக்கள் தேர்வு செய்வர் என்பது எனக்குத் தெரியும்' என்றார்.

பொதுத் தேர்தல் நடைபெற்றதையொட்டி, அந்நாடு முழுவதும் 6 லட்சம் வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இந்த பாதுகாப்பையும் மீறி, 8 மாவட்டங்களில் தேர்தல் தொடர்பான வன்முறைகள் நிகழ்ந்தன. இதில் ஒரு பாதுகாப்புப் படை வீரர் உள்பட மொத்தம் 17 பேர் பலியாகினர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

வாக்குப்பதிவு முடிவடைந்தவுடன் வாக்கு எண்ணிக்கை துவங்கியது. அதில் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான ஆளும் அவாமி லீக் கூட்டணி முன்னிலை வகிக்கிறது. இதுகுறித்து வங்கதேசத்தை சேர்ந்த பிடிநியூஸ்.24 வலைதளம் வெளியிட்டுள்ள செய்தியில், "ஞாயிற்றுக்கிழமை இரவு 11.30 மணி நிலவரப்படி, அவாமி லீக் 119 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. அதன் கூட்டணி கட்சியான "ஜாதிய கட்சி' 18 இடங்களை கைப்பற்றியிருந்தது. சிறை தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் வங்கதேச தேசியவாத கட்சி 2 தொகுதிகளில் மட்டுமே வென்றுள்ளது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோபால்கஞ்ச்-3 தொகுதியில் போட்டியிட்ட ஷேக் ஹசீனா மாபெரும் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் வங்கதேச பொதுத்தேர்தலில், அந்நாட்டு ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் அணித்தலைவரான மஷ்ரபி பின் மோர்டாசா வெற்றி பெற்று, எம்.பியாகத் தேர்வு செய்ப்பட்டுள்ளார்.   

இந்த தேர்தலில், அவாமி லீக் கட்சி சார்பில் அவர் போட்டியிட்டார். தான் போட்டியிட்ட நரைல் 2 தொகுதியில் அவர் 2 லட்சத்து 74 ஆயிரத்து 418 ஓட்டுகளை பெற்று வெற்றி அடைந்துள்ளார்.  அவரை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர் 8 ஆயிரத்து 6 ஓட்டுகளையே பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் 2 லட்சத்து 66 ஆயிரத்து 412 ஓட்டுகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்று நாடாளுமன்றத்தில் நுழைகிறார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com