தாய்லாந்து குகையில் சிக்கிய 12 சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளர் பத்திரமாக மீட்பு: திக் திக் நாட்களின் கதை! 

தாய்லாந்து வெள்ள நீர் புகுந்த குகையில் சிக்கித் தவித்த 12 சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். 
தாய்லாந்து குகையில் சிக்கிய 12 சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளர் பத்திரமாக மீட்பு: திக் திக் நாட்களின் கதை! 

பாங்காக்: தாய்லாந்தில் வெள்ள நீர் புகுந்த குகையில் சிக்கித் தவித்த 12 சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

தாய்லாந்தினைச் சேர்ந்த 11 முதல் 16 வயது வரை கொண்ட 12 சிறுவர்களை, அவரது 25 வயது கால்பந்து பயிற்சியாளர் சியாங் ராய் என்னும் பகுதிக்கு கடந்த மாதம் 23-ஆம் தேதி சுற்றுலா அழைத்துச் சென்றார். அப்போது அந்தப் பகுதியிலுள்ள, பல கி.மீ. நீளம் கொண்ட குகையைப் பார்வையிட, அந்த 13 பேரும் அதற்குள் சென்றுள்ளனர். எனினும், திடீரென பெய்த பெரு மழை மற்றும் வெள்ளம் காரணமாக அந்த குகைக்குள் வெள்ளமும், சகதியும் புகுந்தது.அதனால் வெளிச்சமும், வெளியேறும் வழியும் இல்லாமல் அவர்கள் குகைக்குள் சிக்கிக் கொண்டனர். 

அவர்களைத் தேடி அந்தப் பகுதிக்கு வந்த மீட்புக் குழுவினர், குகை வாயிலில் அவர்களது மிதிவண்டி உள்ளிட்ட பொருள்கள் இருப்பதை வைத்து அந்தக் குகைக்குள் அவர்கள் சென்றிருப்பதை உறுதி செய்தனர். எனினும், தொடர்ந்து பெய்து வந்த கன மழை மற்றும் வெள்ளம் காரணமாக குகைக்குள் சென்று அவர்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது.

இந்தத் தகவல், தாய்லாந்து முழுவதும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. குகைக்குள் மாயமான சிறுவர்களும், அவர்களது பயிற்சியாளரும் உயிருடன் மீட்கப்பட வேண்டும் என்று நாடு முழுவதும் பிரார்த்தனை செய்யப்பட்டன. இந்தச் சூழலில், தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த பிரிட்டன் நீச்சல் வீரர் ஒருவர் குகையின் பாறை மேடு ஒன்றில் அந்த 13 பேரையும் 10 நாள்களுக்குப் பிறகு கண்டறிந்தார். பசி மற்றும் களைப்பால் மிகவும் சோர்வுற்றும், மெலிந்தும் காணப்பட்ட அவர்கள் அந்த வீரரிடம் பேசிய விடியோவை தாய்லாந்து கடல் அதிரடிப்படை வெளியிட்டது.

அதன் தொடர்ச்சியாக, அவர்களுக்கு உணவு, மருந்துகள் மற்றும் அத்தியாவசியப்  பொருள்கள் அனுப்பப்பட்டன. குகைக்குள் சிறுவர்கள் இருக்குமிடம் கண்டறியப்பட்டாலும், குகைக்குள் ஓடும் வெள்ள நீர் மற்றும் சகதியில் நீந்தி வர அவர்களுக்கு சிறப்பு நீச்சல் பயிற்சி அளிக்கப்பட வேண்டும்; அல்லது குகையில் வெள்ள நீர் வடியும் வரை காத்திருந்து அவர்களை வெளியே அழைத்து வரலாம் என்று மீட்புக் குழுவினர் தெரிவித்தனர். எனினும், அதற்கு பல மாதங்கள் ஆகலாம் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில், அந்த 13 பேரும் குறுகலான குகைப் பாதையில் தேங்கியிருக்கும் வெள்ள நீரில் நீந்தி வருவதற்கு உடலளவிலும், மனதளவிலும் 100 சதவீதம் தயாரான பிறகு, ஒவ்வொருவராக குகையிலிருந்து மீட்கப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் பன்னாட்டு மீட்புக் குழுவினரும் பணியில் இணைந்து கொண்ட நிலையில் கடந்த மாதம் 23-ஆம் தேதி முதல் மழை வெள்ள நீர் புகுந்த குகைக்குள் சிக்கியிருந்த 13 பேரில், முதல்முறையாக 4 சிறுவர்களை மீட்புக் குழுவினர் ஞாயிற்றுக்கிழமை மீட்டு அழைத்து வந்தனர். மீட்கப்பட்ட அந்த 4 பேரும் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும், மீட்புப் பணிகள் எதிர்பார்த்ததைவிட சுலபமாக இருந்ததாகவும் அப்போது ராணுவ மற்றும் கடற்படை அதிகாரிகள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. மீட்கப்பட்ட 4 சிறுவர்களும் அவசர ஊர்தியில் அழைத்துச் செல்லப்பட்டனர். 

குகைக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி, திங்கள்கிழமையும் தொடர்ந்து நடைபெற்றது. இதில், மேலும் 4 சிறுவர்களை மீட்புக் குழுவினர் குகைக்குள்ளிருந்து மீட்டு அழைத்து வந்தனர். அதையடுத்து கடந்த 2 நாள்களாக மேற்கொள்ளப்பட்டு வரும் கடுமையான மீட்புப் பணிகளில் குகையிலிருந்து வெளியே அழைத்துவரப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை 8-ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் மீட்பு பணிகள் திங்கள்கிழமையன்றும் தொடர்ந்து நடைபெற்று வந்தன. அதன் படி முதலில் 3 சிறுவர்கள் மீட்கப்பட்டனர். அதன்பிறகு இறுதியாக சிக்கி இருந்த ஒரே ஒரு சிறுவனும், பயிற்சியாளரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். 

இந்த மீட்பு நிகழ்ச்சியானது தாய்லாந்து முழுவதும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com