புதிய ஜனநாயகத்தை வரவேற்கும் பாகிஸ்தான்: நாளை பொதுத் தேர்தல்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை வெற்றிகரமாக வழிநடத்தி உலகக் கோப்பை பெற்றுத் தந்த இம்ரான் கான், பொதுத் தேர்தலிலும் வெற்றிவாகை சூடுவாரா? புதன்கிழமை நடைபெறும் பொதுத்தேர்தலில் மொத்தமுள்ள 272 இடங்களில்...
புதிய ஜனநாயகத்தை வரவேற்கும் பாகிஸ்தான்: நாளை பொதுத் தேர்தல்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை வெற்றிகரமாக வழிநடத்தி உலகக் கோப்பை பெற்றுத் தந்த இம்ரான் கான், பொதுத் தேர்தலிலும் வெற்றிவாகை சூடுவாரா? புதன்கிழமை நடைபெறும் பொதுத்தேர்தலில் மொத்தமுள்ள 272 இடங்களில் 100 அரசியல் கட்சிகள் போட்டியிடுகின்றன.

பயங்கரவாத தாக்குதல்கள், பயங்கரவாத அமைப்புகளின் மிரட்டல்கள், பயங்கரவாத அமைப்புகளின் ஆதரவுக் குரல்கள் ஆகியவற்றுடன் கூடிய மக்களின் தீர்ப்பை பாகிஸ்தான் ஜனநாயகம் நாளைப் பெறவுள்ளது. பாகிஸ்தானில் பழங்குடியினர் தற்போது முதன்முறையாக வாக்களிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அந்நாடு முழுவதும் உள்ள பழங்குடியினர் இடங்களும், கைபர்-பக்துங்வா மாகாணங்களுடன் இணைக்கப்பட்ட பிறகு இந்நிலை ஏற்பட்டுள்ளது. 

அந்நாட்டின் பொதுத்தேர்தல் ஜூலை 25, புதன்கிழமை நடைபெறுகிறது. இதில் தற்போது ஆளும் பிஎம்எல்-என், முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் பிடிஐ மற்றும் பிபிபி ஆகிய பிரதான கட்சிகள் உட்பட பல உதிரிக் கட்சிகள் மற்றும் அமைப்புகள் ஆகியன இத்தேர்தலில் போட்டியிடுகின்றன.

பாகிஸ்தான் அரசின் பதவிக்காலம் மே 31-ஆம் தேதி நிறைவடைந்ததை தொடர்ந்து அங்கு பொதுத் தேர்தல் நடத்த அனுமதி வழங்கப்பட்டது. இதற்குள்ளாக அந்நாட்டின் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் மற்றும் அவரது மகள் ஆகியோர் பனாமா ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் தேர்தல் பிரசாரங்களின் பொது ஆங்காங்கே பயங்கரவாத தாக்குதல்களையும் சந்தித்து வருகிறது. இவைகளுக்கு மத்தியில் கட்சியினரின் பிரசாரங்களும் அனல் பறந்தன. 

குறிப்பாக பிடிஐ கட்சித் தலைவரும், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான இம்ரான் கான், எதிர்கட்சிகளுக்கு எதிராக கடுமையான பிரசாரங்களை செய்து வருகிறார். அதிலும் நவாஸ் ஷெரீஃபுக்கு எதிராக பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தார். மேலும் இம்ரான் கானுக்கு அந்நாட்டின் ராணுவம் உதவி செய்து வருவதாகவும் அங்கு பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. இதனால் இந்த முறை அவரது பிடிஐ கட்சி ஆட்சி அமைக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இந்தியாவுடனான நட்புறவு இம்ரான் கானின் வருகையால் புதுப்பிக்க வாய்ப்புள்ளதாகவும் சர்வதேச அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இவற்றுக்கு இடையில், இம்ரான் கானின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அவரது முன்னாள் மனைவிகளில் ஒருவர், சரமாரிக் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். அதில் அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும், ஓரினச்சேர்க்கையை விரும்புகிறவராக இருப்பதாகவும், சட்ட ரீதியாக இல்லாமல் இம்ரான் கானின் குழந்தைகள் பல இருப்பதாகவும் கூறியுள்ள கருத்துகள் அவரின் ஆதரவாளர்கள் மத்தியில் பெரிதாக எதிர்ப்பை ஏற்படுத்தவில்லை. மேலும் சில பாலிவுட் நடிகைகளுடனான அவரது உறவு காரணமாக இந்தியாவிலும் இம்ரான் கானின் 3 குழந்தைகள் வசித்து வருவதாகவும் தனியார் ஊடகத்துக்கு அளித்துள்ள பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். 

மும்பை தீவிரவாத தாக்குதலில் தொடர்புடைய ஹஃபீஸ் சயீத்-இன் மகன் ஹஃபீஸ் தல்ஹா சயீத் மற்றும் மருமகன் காலித் வாலித் ஆகியோரும் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர். கடந்த 2011-ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்டுள்ள ஹஃபீஸ் சயீத்-இன் கட்சி 260 இடங்களில் போட்டியிடுகிறது. அதுபோல பயங்கரவாத தாக்குதல்களால் படுகொலை செய்யப்பட்ட பெனாஸீர் பூட்டோவின் பிபிபி கட்சி சார்பில் அவரது மகன் பிலவால் பூட்டோ சர்தாரி உள்ளிட்டோரும் போட்டியிடுகின்றனர். 

ராவல்பிண்டியில் உள்ள ஆதிலா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள நவாஸ் ஷெரீஃப், பாகிஸ்தானில் நீதியையும், ஜனநாயகத்தையும் குழி தோண்டிப் புதைத்த அனைவரையும் தூக்கி வீசி வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை தர வேண்டும் என்று தனது கட்சியினர் மற்றும் ஆதரவாளர்களுக்கு அரைகூவல் விடுத்துள்ளார். ஆனால், நவாஸ் ஷெரீஃப் தலைமையிலான அரசு விளம்பரங்களில் மட்டுமே வளர்ச்சியை காண்பித்ததாகவும், பாகிஸ்தான் ஜனநாயகம் காக்கப்பட வேண்டும் என்று இம்ரான் கான், தனது பிரசாரங்களில் கடுமையாக விமர்சித்து வந்தார்.  

நாளை காலை 8 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் மொத்தமுள்ள 272 இடங்களிலும் சுமார் 100 கட்சிகளைச் சேர்ந்த 3,459 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவற்றில் 60 இடங்கள் மகளிருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. ஹிந்து உள்ளிட்ட சிறுபான்மையினர்களுக்காக 10 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. பிரசார சமயங்களில் ஏற்பட்ட பயங்கரவாத தாக்குதல்களால் 3 போட்டியாளர்கள் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டனர்.

தேர்தல் பணிகளுக்காக 1.6 மில்லியன் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். 5 லட்சம் காவலர்கள் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 5,878 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானைவாயக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல் நல்ல முறையில் நடைபெற அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று ஓய்வுபெற்ற பாகிஸ்தான் தலைமை தேர்தல் அதிகாரி சர்தார் ராசா கான் அறிவுறுத்தியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com