
பாகிஸ்தானைச் சேர்ந்த நோபல் பரிசு பெற்ற மலாலா யூசுப்சாய் (வயது 20), தன் மீதான பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர் சுமார் 6 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் முதன்முறையாக பாகிஸ்தான் திரும்பினார்.
பாகிஸ்தானில் பெண் குழந்தைகளின் கல்விக்காக தொடர்ந்து குரல் கொடுத்தும், விழிப்புணர்வு ஏற்படுத்தியும் வந்த சிறுமி மலாலா யூசுப்சாய் மீது கடந்த 2012 அக்டோபர் மாதம் பள்ளியில் இருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த போது தாலிபான் பயங்கரவாதியால் தலையில் சுடப்பட்டார்.
அவர் உடனடியாக பெஷாவர் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து அதிர்ஷ்டவசமாக மலாலா உயிர் பிழைத்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக லண்டன் சென்றார்.
அங்கிருந்து பாகிஸ்தான் பெண் குழந்தைகளின் கல்விக்காக தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தார். மேலும் பாகிஸ்தானில் நிலவும் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராகவும் தனது போராட்டத்தை முன்வைத்தார். இதனால் அவருக்கு பலதரப்பில் இருந்தும் ஆதரவு பெருகின.
பெண் குழந்தைகளின் கல்விக்காக போராடி வரும் மலாலாவுக்கு அமைத்திக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. அப்போது அவருக்கு வயது 17, (இதன்மூலம் குறைந்த வயதில் நோபல் பரிசு வென்றவர் என்ற சாதனைப் படைத்தார்). இதனை இந்தியாவைச் சேர்ந்த குழந்தைகள் உரிமைகளுக்காக போராடி வரும் கைலாஷ் சத்யார்த்தியுடன் பகிர்ந்துகொண்டார்.
இந்நிலையில், சுமார் 6 வருட இடைவேளைக்குப் பின்னர் பாகிஸ்தானுக்கு முதன்முறையாக மீண்டும் திரும்பினார் மலாலா. அப்போது, பாகிஸ்தான் பிரதமர் ஷாகித் கக்கான் அப்பாஸி, ராணுவத் தளபதி குவாமர் ஜாவீத் பாஜ்வா உள்ளிட்ட முக்கியத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். அதுமட்டுமல்லாமல் மலாலாவைச் சந்தியுங்கள் எனும் நிகழ்ச்சியிலும் கலந்துகொள்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.