
கொழும்பு: இலங்கையில் நிலவும் நிச்சயமற்ற அரசியல் சூழலில் இலங்கை பிரதமராக மகிந்த ராஜபட்ச திங்களன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
இலங்கையில் ரணில் விக்ரமசிங்க தலைமையில் கூட்டணி அரசு கடந்த 2015ஆம் ஆண்டில் அமைந்தது. அவரது அரசுக்கு சிறீசேனாவின் யுபிஎஃப்ஏ கட்சியும் ஆதரவளித்தது. இந்நிலையில், இலங்கையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடைபெற்ற தேர்தலில் ராஜபட்சவின் புதிய கட்சி அதிக இடங்களில் வென்றது. இதைத் தொடர்ந்து, ரணில் - சிறீசேனா கூட்டணியில் விரிசல் உருவானது.
ரணில் அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் ராஜபட்ச கட்சியும், சிறீசேனா கட்சியும் கூட்டாக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கடந்த ஏப்ரல் மாதம் கொண்டு வந்தன. எனினும், அந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை ரணில் தோற்கடித்தார். இதன்பிறகு, ரணிலுக்கும், சிறீசேனாவுக்கும் தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வந்தது. அதன் தொடர்ச்சியாகவே, பிரதமர் பதவியிலிருந்து ரணிலை நீக்கிவிட்டு, ராஜபட்சவை சிறீசேனா கடந்த வெள்ளியன்று நியமித்தார்.
இலங்கையில் அரசியல் குழப்பம் நீடித்துவரும் நிலையில், அந்நாட்டு நாடாளுமன்றத்தை வரும் நவம்பர் மாதம் 16-ஆம் தேதி வரை அதிபர் மைத்ரிபால சிறீசேனா முடக்கி வைத்துள்ளார். இந்நிலையில் இலங்கை பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே நீடிப்பதாக சபாநாயகர் கரு ஜெயசூர்யா ஞாயிறன்று அங்கீகாரம் அளித்துள்ளார் இதனால் இலங்கையில் அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது.
இந்நிலையில் இலங்கை பிரதமராக மகிந்த ராஜபட்ச திங்களன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
திங்களன்று காலை பிரதமர் அலுவலகத்தில் அவர் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். அவரது தலைமையிலான அமைச்சரவையின் சிறிய பகுதி மட்டும் விரைவில் பதவியேற்கும் என்று தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.