சீனாவை தாக்கியது சக்திவாய்ந்த மங்குட் புயல்: 24.5 லட்சம் பேர் வெளியேற்றம்

பிலிப்பின்ஸ் மற்றும் ஹாங்காங்கை சூறையாடிய மங்குட் புயல் மெல்ல நகர்ந்து சீனாவையும் ஞாயிற்றுக்கிழமை அதிரடியாக தாக்கியது.
China Typhoon Mangkhut
China Typhoon Mangkhut
Published on
Updated on
1 min read

பிலிப்பின்ஸ் மற்றும் ஹாங்காங்கை சூறையாடிய மங்குட் புயல் மெல்ல நகர்ந்து சீனாவையும் ஞாயிற்றுக்கிழமை அதிரடியாக தாக்கியது.
 இதுகுறித்து சீனாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான ஜின்ஹுவா தெரிவித்துள்ளதாவது:
 பசிபிக் பெருங்கடலில் உருவான மங்குட் புயலின் தாக்கம் பிலிப்பின்ஸ், ஹாங்காங்கைத் தொடர்ந்து தற்போது சீனாவின் பக்கம் திரும்பியுள்ளது. சக்திவாய்ந்த மங்குட் புயல் ஞாயிற்றுக்கிழமை மாலை தெற்கு சீனாவின் குவாங்டங் மாகாணத்தில் உள்ள ஜியாங்மென் கடற்கரை நகரத்தை கடுமையாகத் தாக்கியது. அப்போது மணிக்கு 162 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியது.
 மங்குட் புயல் தாக்கத்தின் அச்சம் காரணமாக பாதுகாப்பு கருதி அங்கு வசித்த 24.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதுப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். மேலும், 48,000 மீன்பிடிப் படகுககள் கடலுக்குள் இருந்து மாகாணத்தின் துறைமுகத்துக்கு வரவழைக்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டன.
 மங்குட் புயலின் சீற்றம் அதிகமாக இருக்கும் என்பதால் 29,000 இடங்களில் நடைபெற்றுவந்த கட்டுமானப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டன. 632 சுற்றுலாத் தளங்களும் மூடப்பட்டன.
 முன்னதாக, ஹெய்னன் மாகாணத்தில் உள்ள இரண்டு விமான நிலையங்களில் 400-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. அனைத்து கடற்கரை நகரங்களையொட்டியுள்ள ரிசார்ட்டுகள், பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன.
 மங்குட் புயலால் ஞாயிற்றுக்கிழமை காலை பலத்த காற்றுடன் கன மழையும் பெய்தது. இதனால், தென் சீன நகரங்களான குவாங்டங், ஹெய்னன், குவாங்ஸி ஜுவங் உள்ளிட்ட தன்னாட்சி பகுதிகளில் கடும் பாதிப்பு ஏற்பட்டது.
 குவாங்டங் மாகாணத்தைப் பொருத்தவரையில் பொதுமக்களுக்கு உதவுவதற்காக உள்ளூர் நிர்வாகத்தினர் 3,777 அவசரகால முகாம்களை அமைத்துள்ளனர். அம்மாகாணத்திலிருந்து மட்டும் சுமார் 1,00,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக ராணுவ படைகள் கடற்கரை நகரங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மேலும், வெள்ள அபாயத்திலிருந்து மக்களை காப்பாற்ற 1,000 உயிர்காக்கும் படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
 மங்குட் புயலின் நகர்வுகள் குறித்து அவ்வப்போது வானிலை மையம் துல்லியமான தகவல்களை அளித்து வருகிறது. அந்த செய்திகள் அனைத்தும், ஊடகங்கள், செல்லிடப்பேசி, இணையதளங்கள் வழியே பொதுமக்களின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு உஷார் படுத்தப்பட்டு வருகிறது என ஜின்ஹுவா தெரிவித்துள்ளது.
 முன்னதாக, மங்குட் புயல் பிலிப்பின்ûஸத் தாக்கியதில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 49-ஆக அதிகரித்துள்ளது.
 அந்த நாட்டின் முக்கியத் தீவான லூúஸானை புயல் தாக்கியதில் ஏராளமான விளை நிலங்கள் தண்ணீரில் மூழ்கியதுடன், வெள்ளப் பெருக்கும், நிலச்சரிவும் ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கிப் போனது.
 அதன்பிறகு, அங்கிருந்து மெல்ல நகர்ந்த மங்குட் புயல் ஹாங்காங் நகரத்தையும் சூறையாடியது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com