நாடாளுமன்ற கலைப்பு சட்டவிரோதம்: இலங்கை உச்சநீதிமன்றம் தீர்ப்பு

"இலங்கை நாடாளுமன்றத்தை அதிபர் சிறீசேனா கலைத்து உத்தரவிட்டது செல்லாது; அது சட்டவிரோதம்'' என்று அந்நாட்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வழக்கில் இலங்கை
நாடாளுமன்ற கலைப்பு சட்டவிரோதம்: இலங்கை உச்சநீதிமன்றம் தீர்ப்பு

"இலங்கை நாடாளுமன்றத்தை அதிபர் சிறீசேனா கலைத்து உத்தரவிட்டது செல்லாது; அது சட்டவிரோதம்'' என்று அந்நாட்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வழக்கில் இலங்கை உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள இந்த தீர்ப்பு, அதிபர் சிறீசேனாவுக்கு ஏற்பட்ட பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

இதுதொடர்பாக இலங்கை உச்சநீதிமன்றத்தில் 13 மனுக்கள் தொடுக்கப்பட்டிருந்தன. அந்த மனுக்கள் மீதான விசாரணை முடிவடைந்ததையடுத்து, அதன்மீது இலங்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி நலின் பெரேரா உள்ளிட்ட 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு தனது தீர்ப்பை வியாழக்கிழமை வெளியிட்டது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

நாடாளுமன்றம் தனது பதவிக்காலத்தில் நான்கரை ஆண்டுகள் பூர்த்தி செய்தபிறகே, அதை கலைப்பதற்கு அதிபருக்கு அதிகாரம் உள்ளது. அதற்கு முன்னதாக, நாடாளுமன்றத்தை அதிபரால் கலைக்க முடியாது. ஆதலால், நாடாளுமன்றத்தை அதிபர் சிறீசேனா கலைத்து உத்தரவிட்டது சட்டவிரோதம். அந்த உத்தரவு செல்லாது என்று தீர்ப்பளிக்கிறோம் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வழக்கில், இலங்கை உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பு வெளியிட்டதையொட்டி, அந்நீதிமன்றத்தை சுற்றிலும் முன்னெச்சரிக்கையாக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சிறப்பு அதிரடிப்படை வீரர்கள் உள்ளிட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

பின்னணி: இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவிநீக்கம் செய்துவிட்டு, அந்தப் பதவியில் முன்னாள் அதிபர் ராஜபட்சவை கடந்த அக்டோபர் மாதம் 26ஆம் தேதி சிறீசேனா நியமித்தார். மேலும், நாடாளுமன்றத்தையும் கலைத்து, தேர்தல் நடத்துவதற்கு உத்தரவிட்டார். இதையடுத்து, இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது, தேர்தல் நடத்த உத்தரவிட்டது ஆகியவற்றை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அந்நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதித்தது. இதனைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் ராஜபட்ச அரசுக்கு எதிராக ரணில் கட்சியால் நம்பிக்கையில்லா தீர்மானங்கள் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டன. இலங்கை நாடாளுமன்றத்தில் ரணில் விக்ரமசிங்க அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

இதனிடையே, நாடாளுமன்றத்தை கலைத்ததை எதிர்த்தும், ராஜபட்ச அரசு செயல்பட தடை விதிக்கக்கோரியும் உச்சநீதிமன்றத்தில் தனித்தனியே வழக்குகள் தொடுக்கப்பட்டன. இதில் ராஜபட்ச அரசு செயல்பட தடை விதிக்கக்கோரும் வழக்கு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் அடுத்த மாதத்துக்கு ஒத்திவைத்துள்ளது.

நாடாளுமன்றத்தை சிறீசேனா கலைத்ததை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பை வியாழக்கிழமை வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பின் மூலம், குறைந்தப்பட்சம் 2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரையில் நாடாளுமன்றத்தை சிறீசேனாவால் கலைக்க முடியாது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிக்கப் போவதில்லை என்று சிறீசேனா அறிவித்திருந்தார். ஆனால் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் பெற்றிருக்கும் ரணிலை பிரதமராக ஏற்பதைத் தவிர சிறீசேனாவுக்கு வேறு வழியில்லை என்ற நிலை உருவாகியுள்ளது. இது இலங்கை அரசியலில் சிறீசேனாவுக்கு ஏற்பட்ட பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

ரணில் வரவேற்பு

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை ரணில் விக்ரமசிங்க வரவேற்றுள்ளார். அவர் கூறுகையில், "நீதிமன்றங்களின் தீர்ப்புகளுக்கு அதிபர் மரியாதை கொடுப்பார் என்று நம்புகிறோம். நாடாளுமன்றம், நீதித்துறை, நிர்வாகம் ஆகியவை ஜனநாயக நாட்டில் சரிக்கு சமமானவை ஆகும். மக்களின் உரிமைகளைக் காப்பதற்கு மேற்கண்ட அமைப்புகளுக்கு சரிவிகிதத்தில் அதிகாரமளிக்கப்பட்டுள்ளது' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com