நான்தான் காஷ்மீரின் தூதர்: பாக்., பிரதமர் இம்ரான் கான்

பாகிஸ்தானில் நாட்டு மக்களிடையே உரையாற்றிய அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான், தன்னைத்தானே காஷ்மீரின் தூதர் என்று பிரகடனப்படுத்தி பேசியுள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


பாகிஸ்தானில் நாட்டு மக்களிடையே உரையாற்றிய அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான், தன்னைத்தானே காஷ்மீரின் தூதர் என்று பிரகடனப்படுத்தி பேசியுள்ளார். 

ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கியதையடுத்து, இந்தியா, பாகிஸ்தான் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு பாகிஸ்தான் கடுமையான எதிர்ப்புகளை வெளிப்படுத்தி வருகிறது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உட்பட அந்நாட்டின் பல தலைவர்கள் காஷ்மீர் குறித்து தொடர்ந்து கருத்துகளை வெளிப்படுத்தி வருகின்றனர். 

இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அந்நாட்டு மக்களுக்கு இன்று  (திங்கள்கிழமை) உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், 

"காஷ்மீரில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை இந்தியா தளர்த்தும் வரை, இந்த அரசு காஷ்மீர் மக்களுடன் துணை நிற்கும் என்பதை பாகிஸ்தான் மக்களுக்கு நான் உறுதியளிக்கிறேன். நான் காஷ்மீரின் தூதராக செயல்படுவேன் என்று கூறியுள்ளேன். காஷ்மீர் விவகாரம் குறித்து, உலகம் முழுவதும் பரப்புவேன். நான் தொடர்பில் உள்ள தலைவர்களிடம் காஷ்மீர் குறித்து பேசியுள்ளேன். இந்த விவகாரத்தை நான் ஐ.நா.விலும் எழுப்புவேன்.

முஸ்லிம் நாடுகள் காஷ்மீருக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்காதது குறித்து நாட்டு மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளதாக செய்தித்தாள்களில் படித்தேன். நீங்கள் ஏமாற்றமடைய வேண்டாம். ஒரு சில நாடுகள் தங்களது பொருளாதார நலன் கருதி இந்த விவகாரத்தை எழுப்பாமல் இருக்கலாம். ஆனால், இந்த விவகாரம் குறித்து அவர்களும் ஒரு நாள் நிச்சயம் பேசித்தான் ஆக வேண்டும். அது காலத்தின் கட்டாயம்.

ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததன் மூலம் மோடி வரலாற்றுப் பிழையை செய்துள்ளார்" என்றார்.

அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. பொதுக்கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உரையாற்றுகிறார். எனவே, இந்த கூட்டத்தில் அவர் காஷ்மீர் விவகாரத்தை எழுப்பவுள்ளார் என்பது உறுதியாகியுள்ளது. 

காஷ்மீர் விவகாரத்தை அனைத்து சர்வதேச மன்றங்களுக்கும் கொண்டு செல்வேன் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தொடர்ந்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com