இந்தியாவைத் தாக்க ஜெய்ஷ் அமைப்பைப் பயன்படுத்திய பாகிஸ்தான் புலனாய்வு அதிகாரிகள்: முஷாரஃப்

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தி என்னைக் கொலை செய்ய முயன்றனர் என்று பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃப் கூறியுள்ளார்.
இந்தியாவைத் தாக்க ஜெய்ஷ் அமைப்பைப் பயன்படுத்திய பாகிஸ்தான் புலனாய்வு அதிகாரிகள்: முஷாரஃப்
Published on
Updated on
1 min read


புது தில்லி: ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தி என்னைக் கொலை செய்ய முயன்றனர் என்று பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃப் கூறியுள்ளார்.

எனது ஆட்சி காலத்திலேயே இந்தியாவைத் தாக்க ஜெய்ஷ் அமைப்பை பாகிஸ்தான் புலனாய்வு அதிகாரிகள் பயன்படுத்தினர் என்றும் முஷாரஃப் கூறியுள்ளார்.

தற்போது துபாயில் இருக்கும் 75 வயதான பர்வேஸ் முஷாரஃப், பாகிஸ்தானில் இருந்து இயங்கும் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை அந்நாட்டு அரசு ஒழிக்க எடுக்கும் நடவடிக்கை வரவேற்கத்தக்கது என்று தெரிவித்துள்ளார்.

ஜெய்ஷ் அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்ட புல்வாமா  தாக்குதலுக்குப் பிறகு இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் ஏற்பட்டது.

இந்த நிலையில், புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து எல்லை தாண்டிய பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்த பாகிஸ்தானுக்கு சர்வதேச நெருக்கடி அதிகரித்து வரும் சூழலில், அந்தத் தாக்குதலுக்குக் காரணமான ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அஸாரின் மகன், சகோதரர் உள்பட 44 பேரை பாகிஸ்தான் அதிகாரிகள் கைது செய்தனர்.

இது குறித்து பர்வேஸ் முஷாரஃப் கூறுகையில், இது ஒரு நல்ல நடவடிக்கை. ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு ஒரு பயங்கரவாத அமைப்பு என்பதை நான் கூறிவந்தேன். என்னைக் கொல்ல அந்த அமைப்பு தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தது. அவர்களுக்கு எதிராக நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், தங்கள் ஆட்சிக் காலத்தில் ஏன் அவர்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்விக்கு, அப்போது சூழ்நிலை வேறுவிதமாக இருந்தது. இந்தியா - பாகிஸ்தான் இடையேயான விவகாரத்தில் பாகிஸ்தான் புலனாய்வுத் துறை அதிகாரிகள் வேறுமாதிரி நடந்து கொண்டார்கள். எனது ஆட்சி காலத்தில் இது நீடித்துக் கொண்டே இருந்ததால், அப்போது என்னால் எதுவுமே செய்ய முடியவில்லை என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com