அண்டார்டிகாவில் 315 பில்லியன் டன் ராட்சத பனிப்பாறை உடைந்தது; 50 ஆண்டுகளில் இல்லாத அரிய நிகழ்வு!

அண்டார்டிகாவின் 'அமெரி' என்ற பனிப்பாறையில் இருந்து மிகப்பெரிய அளவிலான பனிப்பாறை ஒன்று பிரிந்துள்ளது. 1960களுக்குப் பிறகு பிரிந்த பனிப்பாறைகளில் இதுவே மிகப்பெரிய அளவிலானது. 
அண்டார்டிகாவில் 315 பில்லியன் டன் ராட்சத பனிப்பாறை உடைந்தது; 50 ஆண்டுகளில் இல்லாத அரிய நிகழ்வு!

அண்டார்டிகாவின் 'அமெரி' என்ற பனிப்பாறையில் இருந்து மிகப்பெரிய அளவிலான பனிப்பாறை ஒன்று பிரிந்துள்ளது. 1960களுக்குப் பிறகு பிரிந்த பனிப்பாறைகளில் இதுவே மிகப்பெரிய அளவிலானது. 

அண்டார்டிகா: 

அண்டார்டிகா பூமியின் தென் முனையில் அமைந்திருப்பதால் சூரியனின் தாக்கம் குறைவாகவே இருக்கும். இதனால் அண்டார்டிகா முழுவதுமே பனிக்கட்டிகளால் சூழ்ந்திருக்கும். உலகிலேயே மிகவும் குளிரான பகுதி என இது கருதப்படுகிறது. 

பனிப்பாறைகள் உடைதல்:

இங்கு பனிப்பாறைகள் மீது மழைத்துளி பட்டு மிகவும் பெரிதாகும் நிலையில், அதில் இருந்து சிறிய பனிப்பாறைகள் தனியே பிரிவது வழக்கமான ஒரு நிகழ்வு. அதிகபட்சமாக 1960ம் ஆண்டு 'அமெரி' பனிப்பாறையில் இருந்து பிரிந்த பனிப்பாறையின் அளவு 9 ஆயிரம் சதுர கி.மீ  ஆகும். இதன் பின்னர் சுமார் 50 ஆண்டுகளுக்கு பிறகு மிகப்பெரிய அளவிலான பனிப்பாறை ஒன்று 'அமெரி' பனிப்பாறையில் இருந்து பிரிந்துள்ளது. இதன் அளவு 1,636 சதுர கி.மீ. இதற்கு டி28(D28) என்று அறிவியலாளர்கள் பெயரிட்டுள்ளனர். 

'கால்விங்' என்றால் என்ன?

மிகப்பெரிய பனிப்பாறையில் இருந்து சிறிய பனிப்பாறைகள் பிரியும் இந்த நிகழ்வு 'கால்விங்' என்று அழைக்கப்படுகிறது. அதாவது, மிகப்பெரிய பனியடுக்கின் மீது மழைத்துளி தொடர்ந்து விழும் போது, பனியடுக்கின் அளவு பெரிதாகும். ஒரு கட்டத்தில் அழுத்தம் அதிகரிக்கும் போது அதன் கீழடுக்கில் இருந்து ஒரு பனிப்பாறை பிரிந்து செல்லும் நிகழ்வு தான் 'கால்விங்' ஆகும்.

விஞ்ஞானிகளின் கணிப்பு:

இந்த நிலையில் அண்டார்டிகாவின் மூன்றாவது மிகப்பெரிய பனியடுக்கில் இருந்து 'அமெரி' யில் இருந்து 50 ஆண்டுகளுக்குப் பிறகு பனிப்பாறை பிரிந்துள்ள நிகழ்வு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. 

பனியடுக்கின் செயற்கைக்கோள் புகைப்படத்தை வைத்து விஞ்ஞானிகள் இதனை முன்னதாகவே கணித்திருந்தனர். புகைப்படத்தை வைத்து புதிதாக பிரியும் பனிப்பாறைக்கு 'ஆடும் பல்' என்று பெயரிட்டிருந்தனர். ஆனால், தற்போது நிகழ்வு நடந்திருக்கும் பகுதிக்கு கிழக்கே நடக்கும் என்று விஞ்ஞானிகள் கணித்திருந்தனர்.

தற்போது உருவான பனிப்பாறையின் அளவு மிகப்பெரிது என்பதால் இதனை அறிவியலாளர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும் இதனால் அண்டார்டிகாவில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்படும் என்றும்  கருதப்படுகிறது. 

பருவநிலை மாற்றம் ஏற்படுமா?

இதுகுறித்து ஸ்கிரிப்ஸ் ஆராய்ச்சியாளர் ஹெலன் பிரிக்கர் கூறும் போது, 'இத்தனை வருடங்களுக்குப் பிறகு மிகப்பெரிய பனிப்பாறை ஒன்று உருவாகும் என்று நாங்கள் ஏற்கனவே கணித்திருந்தோம். ஆனால், நாங்கள் கணித்த இடத்தில் மட்டும் சற்று மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த நிகழ்விற்கும், பருவநிலை மாற்றத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை.

1990ம் ஆண்டில் இருந்தே செயற்கைக்கோள் அனுப்பும் தகவல்களில் இருந்து நாங்கள் இதனை எதிர்பார்த்தோம். கோடைக்காலத்தில் வெப்பத்தின் காரணமாக பனிப்பாறைகள் அதிகளவில் உருகினாலும் 'அமெரி' பனிப்பாறை சமதளத்துடன் தான் இருக்கிறது. எனினும் 'அமெரி' பனிப்பாறையை  விஞ்ஞானிகள் கவனித்துக்கொண்டு தான் இருப்பர்' என்று தெரிவித்தார். 

'டி28' பனிப்பாறை சுமார் 210மீ தடிமன் என்ற அளவில் உள்ளது மற்றும் சுமார் 315 பில்லியன் டன் பனியைக் கொண்டுள்ளது. இதன் அருகில் உள்ள நீரோட்டங்கள் மற்றும் காற்றானது டி28- யை மேற்கு நோக்கி கொண்டு செல்லும். டி28 முழுமையாக உருக பல ஆண்டுகள் ஆகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. 

2017ஆம் ஆண்டு 'லார்சன் சி' பனிப்பாறையில் இருந்து பிரிந்த 'A68' பனிப்பாறையை ஒப்பிடும்போது 'டி28' குள்ளமாக உள்ளது. தற்போது உருவான 'டி28' யை விட 'ஏ68' மூன்று மடங்கு பெரிது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com