சின்மயானந்த் வழக்கு: அலாகாபாத் உயர்நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வு குழு அறிக்கை தாக்கல்

பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சுவாமி சின்மயானந்த் (72) மீதான பாலியல் புகார் வழக்கு தொடர்பாக, அலாகாபாத் உயர்நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வுக் குழு திங்கள்கிழமை


பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சுவாமி சின்மயானந்த் (72) மீதான பாலியல் புகார் வழக்கு தொடர்பாக, அலாகாபாத் உயர்நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வுக் குழு திங்கள்கிழமை விசாரணை அறிக்கை தாக்கல் செய்தது. .
உத்தரப் பிரதேச மாநிலம், ஷாஜகான்பூரில் சுவாமி சின்மயானந்த் தனது அறக்கட்டளை சார்பில் சட்டக் கல்லூரி ஒன்றை நடத்தி வருகிறார். அந்தக் கல்லூரியில் பயின்று வந்த மாணவி ஒருவர், சின்மயானந்த் மீது பாலியல் வன்கொடுமை குற்றம்சாட்டி, சமூக வலைதளத்தில் கடந்த மாதம் விடியோ ஒன்றை வெளியிட்டார். இது தொடர்பாக, அந்தப் பெண்ணின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து, கடந்த மாதம் 27-ஆம் தேதி சின்மயானந்த் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரத்தை, தானாக முன்வந்து விசாரித்த உச்சநீதிமன்றம், கல்லூரி மாணவியின் புகார் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைக்க உத்தரப் பிரதேச அரசுக்கு உத்தரவிட்டது. 
அதையடுத்து, இந்த வழக்கு தொடர்பாக, புகார் அளித்த மாணவி, அவரது பெற்றோர்கள், சின்மயானந்த் உள்ளிட்டோரிடம் சிறப்பு புலானாய்வு குழு விசாரித்தது. விசாரணையின்போது, தன்னிடம் இருந்த விடியோ ஆதாரங்களை அந்தப் பெண் ஒப்படைத்தார். அதையடுத்து, சின்மயானந்தின் ஆசிரமம், வீடு ஆகியவற்றில் சோதனை செய்த சிறப்பு புலனாய்வுக் குழு, கடந்த 20-ஆம் தேதி அவரை கைது செய்தது. அவர் இப்போது 14 நாள் நீதிமன்றக் காவலில் உள்ளார்.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை அலாகாபாத் உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் மனோஜ் மிஸ்ரா மற்றும் மஞ்சு ராணி செளகான் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது, விசாரணை அறிக்கையை சிறப்பு புலனாய்வுக் குழு சமர்ப்பித்தது. அறிக்கையை படித்த நீதிபதிகள், சிறப்பு புலனாய்வு குழுவின் அறிக்கை திருப்தியளிப்பதாகவும், விசாரணை சரியான பாதையில் சென்றுக் கொண்டிருக்கிறது என்றும் தெரிவித்தனர். அதையடுத்து, வழக்கின் அடுத்த விசாரணை அறிக்கையை அக்டோபர் 22-ஆம் தேதி சமர்ப்பிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதனிடையே, தன் மீது சின்மயானந்த் தொடுத்திருந்த பணப்பறிப்பு வழக்கில், தன்னை கைது செய்வதற்கு தடை விதிக்குமாறு அந்த மாணவி கோரிக்கை விடுத்தார். அதைக் கேட்ட நீதிபதிகள், சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணையை மேற்பார்வையிடுவதற்காக மட்டுமே இந்த அமர்வு அமைக்கப்பட்டது; இந்த விவகாரம் தொடர்பாக உத்தரவு பிறப்பிக்க எங்களுக்கு அதிகாரமில்லை என்றும், சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை அணுகுமாறும் தெரிவித்தனர்.
சின்மயானந்த் மருத்துவமனையில் அனுமதி: பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ள சின்மயானந்த், உடல்நலக் குறைவு காரணமாக, லக்னெளவில் உள்ள மருத்துவமனைக்கு திங்கள்கிழமை மாற்றப்பட்டார். இதுதொடர்பாக சிறை அதிகாரிகள் கூறுகையில், சின்மயானந்துக்கு இதயக் கோளாறு இருப்பதாகவும், அதற்கு ஆஞ்சியோகிராபி சிகிச்சை அளிக்க வேண்டியது அவசியம் என்றும் மருத்துவர்கள் கூறியதையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com