நாடாளுமன்ற முடக்கம் சட்டவிரோதம்: இங்கிலாந்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு  

வரும் அக்டோபர் மாதம் 14-ஆம் தேதி வரை பிரிட்டன் நாடாளுமன்றத்தை முடக்கிய பிரதமர் போரிஸ் ஜான்சனின் செயல் சட்டவிரோதமானது என்று இங்கிலாந்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 
பிரிட்டன்  பிரதமர் போரிஸ் ஜான்சன்
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்

லண்டன்: வரும் அக்டோபர் மாதம் 14-ஆம் தேதி வரை பிரிட்டன் நாடாளுமன்றத்தை முடக்கிய பிரதமர் போரிஸ் ஜான்சனின் செயல் சட்டவிரோதமானது என்று இங்கிலாந்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

செப்டம்பர் மாதம் 9-ஆம் தேதியிலிருந்து தொடங்க வேண்டிய இங்கிலாந்து நாடாளுமன்றக் கூட்டத் தொடரை ரத்து செய்வது குறித்து அரசி எலிசபெத்திடம் பிரதமர் போரிஸ் ஜான்ஸன் அனுமதி கோரினார். அரசியும் அதற்கான ஒப்புதலை வழங்கிவிட்டார். இதையடுத்து பிரிட்டன் நாடாளுமன்றத்தை அக்டோபர் மாதம் 14-ஆம் தேதி வரை முடக்கி வைக்கும் அறிவிப்பை, பிரதமர் போரிஸ் ஜான்சன் கடந்த மாதம் 29-ஆம் தேதியன்று வெளியிட்டார்.

அடுத்த நாடாளுமன்றக் கூட்டத் தொடர் வரும் அக்டோபர் மாதம் 14-ஆம் தேதி தொடங்கவிருக்கிறது. புதிய அரசு அமைந்த பிறகு நாடாளுமன்றத்தில் அரசர் அல்லது அரசி உரையாற்றும் மரபுப்படி, அந்தக் கூட்டம் அரசி எலிசபெத்தின் உரையுடன் தொடங்கும். இதுதொடர்பாக, தனது அமைச்சரவையுடனும் பிரதமர் போரிஸ் ஜான்ஸன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

அக்டோபர் மாத மத்தியில் நடைபெறவிருக்கும் ஐரோப்பிய கவுன்சில் கூட்டத்தில் பிரெக்ஸிட் ஒப்பந்தம் உருவானால், அந்த மாதம் 31-ஆம் தேதிக்குள் பிரெக்ஸிட் நடவடிக்கையை நிறைவேற்றும் வகையில் பிரெக்ஸிட் ஒப்பந்த மசோதாவை புதிய நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் அறிமுகப்படுத்தவும் அவர் திட்டமிட்டுள்ளார்.

இவ்வாறு கடந்த 400 ஆண்டுகளில் இல்லாத வகையில் பிரிட்டன் நாடாளுமன்றம் நீண்டகாலம் முடக்கப்படுவதற்கு, பிரெக்ஸிட்  தொடர்பான புதிய கொள்கைகளை உருவாக்குவதற்கு போதிய நேரம் எடுத்துக்கொள்ள பிரதமர் விரும்புவதே காரணம் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

எனினும், ஒப்பந்தம் இல்லாமல் பிரெக்ஸிட் நடைபெறுவதை விரும்பாத எம்.பி.க்கள், அத்தகைய பிரெக்ஸிட்டைத் தடுக்கும் மசோதாக்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதைத் தடுப்பதற்காகவே அக்டோபர் 14-ஆம் தேதி வரை நாடாளுமன்றத்தை பிரதமர் போரிஸ் ஜான்ஸன் முடக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. பிரதமரின் இந்த முடிவுக்கு எதிர்க்கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதை எதிர்த்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 75 பேர் ஸ்காட்லாந்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்கள்.  அதில் நாடாளுமன்றத்தை முடக்கும் பிரதமரின்  அதிகாரத்தில் தலையிட நீதிமன்றத்திற்கு உரிமையில்லை என்று முதலில்  தீர்ப்பளிக்கப்பட்டது.

இதை எதிர்த்து செய்யப்பட்ட மேல்முறையீட்டில் ஸ்காட்லாந்தின் மூத்த நீதிபதி கார்லோவாய் அளித்த தீர்ப்பில், வரும் அக்டோபர் மாதம் 14-ஆம் தேதி வரை பிரிட்டன் நாடாளுமன்றத்தை முடக்கிய பிரதமர் போரிஸ் ஜான்சனின் செயல் சட்டவிரோதமானது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இருந்தபோதிலும் இந்த விவகாரத்தில் வழக்கொன்று நிலுவையில இருப்பதால், இங்கிலாந்து உச்ச நீதிமன்றம் எடுக்கும் முடிவே இறுதியானது என்றும் நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

அதன்படி பிரிட்டன் நாடாளுமன்றத்தை முடக்கிய பிரதமர் போரிஸ் ஜான்சனின் செயல் சட்டவிரோதமானது என்று இங்கிலாந்து உச்ச நீதிமன்றம் செவ்வாயன்று தீர்ப்பளித்துள்ளது.

11 பேர் கொண்ட நீதிபதிகள் குழுவானது ஒருமனதாக இந்த தீர்ப்பைஅளித்துள்ளதாக, தலைமை நீதிபதி பிரெண்டா ஹேல் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு சிக்கல்கள் அதிகரித்துள்ளது.

தீர்ப்பையடுத்து புதன்கிழமை முதல் பிரிட்டன் நாடாளுமன்றம் செய்சல்படும் என்று  பொதுச்சபை சபாநாயகர் ஜான் பெர்கோ தெரிவித்துள்ளார்.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com