அமெரிக்காவில் சீக்கிய  போலீஸ் அதிகாரி சுட்டுக் கொலை

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் பணியாற்றி வந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதல் சீக்கிய போலீஸ் அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் சீக்கிய  போலீஸ் அதிகாரி சுட்டுக் கொலை
Published on
Updated on
1 min read

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் பணியாற்றி வந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதல் சீக்கிய போலீஸ் அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது: ஹாரிஸ் மாவட்ட காவல் துறை அதிகாரியாக பணியாற்றி வந்தவர் சந்தீப் சிங் தாலிவால் (42). இவர் ஹூஸ்டனின் வடமேற்குப் பகுதியில் வெள்ளிக்கிழமை பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது வேகமாக வந்த ஒரு காரை அவர் நிறுத்தி சோதனையிட்டார். அப்போது அதிலிருந்த நபர் தாலிவாலை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இதில் பலத்த காயமடைந்த அவர் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனிடையே, சீக்கிய போலீஸ் அதிகாரியை சுட்டுக் கொன்றது தொடர்பாக காவல் துறையினர் ஒரு நபரைக் கைது செய்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் சுட்டுரையில் கூறியுள்ளதாவது:

சீக்கிய போலீஸ் அதிகாரியை சுட்டுக் கொன்றது தொடர்பாக ராபர்ட் சோலிஸ் (47) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து துப்பாக்கி ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தாலிவாலை சுட்டுக் கொல்ல ராபர்ட் இந்த துப்பாக்கியைப் பயன்படுத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அவரிடம், தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என சுட்டுரைப் பதிவில் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

சொந்த கிராமத்தில் சோகம்: சந்தீப் சிங் தாலிவால் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, பஞ்சாப் மாநிலம்  கபூர்தலா மாவட்டத்தில் உள்ளஅவரது மாமனார் இல்லம் அமைந்திருக்கக்கூடிய தாலிவால் பேட் கிராமம் சோகத்தில் மூழ்கியது. உறவினர்கள், கிராம மக்கள் ஒன்று கூடி சந்தீப் சிங் மறைவுக்கு அஞ்சலி செலுத்தினர்.

பஞ்சாப் முதல்வர் கண்டனம்: அமெரிக்காவில் சீக்கிய காவல்துறை அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டதற்கு பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், "ஈவு இரக்கமற்ற இந்தப் படுகொலை மிகுந்த மனவேதனை அளிக்கிறது. தாலிவாலை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்' என்று பதிவில் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com