
செவ்வாய் கிரகத்தில் பறந்து ஆய்வு செய்வதற்காக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் (நாசா) வடிவமைத்துள்ள ஹெலிகாப்டரை, அந்த அமைப்பு வெற்றிகரமாக சோதித்துள்ளது.
இதுகுறித்து நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
செவ்வாய் கிரகத்தில், ஹெலிகாப்டர் இயங்கும் முறையில் பறந்து செல்லக் கூடிய ஆய்வுக் கலத்தைக் கொண்டு ஆய்வுகள் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம்.
இதற்காக, செவ்வாய் கிரகத்தின் மெல்லிய வளிமண்டலத்தில், பூமியை விடக் குறைவான அந்த கிரகத்தின் ஈர்ப்பு விசையில் இயங்கக் கூடிய ஹெலிகாப்டரை வடிவமைத்து வந்தோம்.
1.8 கிலோ எடை கொண்ட அந்த ஹெலிகாப்டர் ஆய்வுக் கலத்தின் வடிமைப்பு, கடுமையான தொழில்நுட்பப் பரிசோதனைகளுக்கு உள்படுத்தப்பட்டு வந்தது.
இந்த நிலையில், அந்த ஹெலிகாப்டர் செவ்வாய் கிரகத்தில் பறந்து செல்வதற்குத் தகுதியானது என்று தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
செவ்வாய் கிரகத்தில் மிகக் கடுமையான குளிர் நிலவி வரும் சூழலில், உறைநிலைக்கு 90 டிகிரி செல்ஷியசுக்குக் கீழும் அந்த ஹெலிகாப்டர் இயங்கும் திறன் கொண்டது.
அடுத்த ஆண்டு செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்படவிருக்கும், சக்கரங்களில் இயங்கக் கூடிய ஆய்வுக் கலத்துடன் இந்த ஹெலிகாப்டர் இணைத்து அனுப்பப்படும்.
செவ்வாய்கிரகத்தை 2021-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அந்த ஆய்வுக் கலம் சென்றடையும். பிறகு சில மாதங்கள் கழித்து அந்த ஹெலிகாப்டர் பறக்கத் தொடங்கும்.
அவ்வாறு பறக்கவிடப்பட்டால், வேற்று கிரகத்தில் பறக்கும் முதல் ஹெலிகாப்டராக அது விளங்கும் என்று நாசா ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
செவ்வாய் கிரகத்தில் பறப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டரை ஆய்வு செய்யும் நாசா விஞ்ஞானிகள்.