
என்ன! கரும்பு தின்ன கூலியா? நம்ப முடியவில்லையா?
நம்பித்தான் ஆகவேண்டும். ஜெர்மனியில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி விஞ்ஞானிகள் தான் இந்த பரிசு தொகையை அறிவித்திருக்கிறார்கள்.
நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் 60 நாட்கள் படுக்கையில் படுத்துக்கொள்ள வேண்டும். அவ்வளவுதான்!
இதனால் அவர்களுக்கு என்ன லாபம் என்கிறீர்களா?
விண்வெளி வீரர்கள் மிதந்து கொண்டு இருப்பதை பார்த்திருப்பீர்கள். ஏனென்றால், அங்கு எந்த கோள்களின் ஈர்ப்பு விசையும் கிடையாது. அதற்காக முழுவதும் இல்லை என்றும் சொல்ல முடியாது. அதனால் தான் விஞ்ஞானிகள் அதை "microgravity" என்று சொல்கிறார்கள்.
இந்த microgravity யின் அளவை உடலில் சோதிக்கவும், மேலும் எடையின்மை காரணமாக உடலில் ஏற்படும் எதிர்மறை விளைவுகளையும் தெரிந்துகொள்வதற்காகத்தான் இந்த 16,500 யூரோ-வைத் தருகிறார்கள். நிலவு மற்றும் செவ்வாய் கிரகங்களுக்கு போகும் விண்வெளி வீரர்களின் உடலில் ஏற்படும் மாற்றங்களுக்கு தீர்வு கண்டுபிடிக்க இது உதவும் என்று நம்புகின்றனர்.
ஜெர்மனியின் விண்வெளி ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத்திற்கான (DLR) நிறுவன அதிகாரி திரு.ஹான்ஜோர்க் டிட்டஸ் (Hansjorg Dittus) கூறும் போது, "இந்த microgravity சம்பந்தமான சோதனைகள் விண்வெளி வீரர்களின் பாதுகாப்புக்கு மேலும் ஒரு கவசமாக இருக்கும்" என்றார்.
அந்த படுக்கை புகைப்படத்தில் உள்ளது போல தலை பக்கம் 6 degree தாழ்ந்து இருக்கும். இது எதற்காக என்றால், உடல் திரவங்கள் உடலின் மேல் பகுதிக்கு செல்வதில் உள்ள பிரச்சினைகளை ஆய்வு செய்வதற்காக. அப்போதுதான் விண்வெளி வீரர்களின் உடல் பிரச்சினைக்கு ஒரு தீர்வை கண்டுபிடிக்க முடியும்.
இந்த சோதனையில் ஈடுபடுபவர்களுக்கு - எல்லாமே அதாவது, பல் விளக்குதல், காலைக்கடன், சாப்பாடு, குளியல், என்று அனைத்துமே படுக்கையில் தான்!
எடை இல்லாத சூழ்நிலை நீடிக்கும் போது, எலும்பு மற்றும் தசை வளர்ச்சியில் குறைபாடு, இதய செயல்பாட்டில் மாற்றம், உடலின் மேல் பகுதிக்குச் செல்லும் திரவங்களின் அளவு குறைதல், மலம் கழிப்பதில் பிரச்சினை என்று பல தொந்தரவுகள் உடலுக்கு ஏற்படும். மேலும், பலவீனம், தலைச்சுற்று, முகம் வீங்குதல், உள் காது தொந்தரவுகள் மற்றும் முதுகு வலி ஆகியவையும் வரும்.
இந்த ஆய்வை, NASA வுடன், ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சியும் இணைந்து இரண்டு கட்டங்களாக நடத்துகின்றன. ஏற்கெனவே மார்ச் மாதம் 25-ம் தேதி முதல் கட்டமாக 12 பேர், இந்த ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள். அடுத்த கட்டமாக செப்டம்பர் மாதம் நடத்தவிருக்கிறார்கள். இந்த முறை, தன்னார்வத்துடன் கலந்துகொள்ளும் பெண்களையும் எதிர்பார்க்கிறார்கள்.
ஜெர்மனியின் Colone நகரில் இது நடைபெறுகிறது. அதனால், இதற்கு விரும்பும் தன்னார்வம் கொண்டவர்களுக்கு ஜெர்மன் மொழி தெரிந்திருக்கவேண்டும். என்ன! ஜெர்மனி கிளம்பிட்டீங்களா...
Jesu Gnanaraj
Germany
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.