
திபெத்திய பெளத்த மதத் தலைவர் தலாய் லாமா உடல்நலக் குறைவு காரணமாக தில்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், தலாய் லாமாவின் அடுத்த வாரிசாக வருபவர், சீனாவின் அனுமதியைப் பெற வேண்டும் என்று அந்நாடு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தலாய் லாமாவுக்கு நெருங்கிய வட்டாரங்கள் கூறுகையில், தலாய் லாமாவுக்கு திடீரென மார்புத் தொற்று ஏற்பட்டதையடுத்து, தில்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை அனுமதிக்கப்பட்டார். சில நாள்கள் மருத்துவமனையில் தங்கி அவர் சிகிச்சை பெற உள்ளார். தற்போது, அவரது உடல்நிலை சீராக உள்ளது என்றனர்.
திபெத்தை சீனா ஆக்கிரமித்ததை அடுத்து அந்நாட்டு பெளத்த மதத் தலைவரான தலாய் லாமா, கடந்த 1959-ஆம் ஆண்டு முதல் ஹிமாசலப் பிரதேசத்தில் உள்ள தர்மசாலாவில் வசித்து வருகிறார். அவருக்கு இந்தியா அடைக்கலம் கொடுத்து வருவது இந்திய-சீன உறவில் முக்கியப் பிரச்னையாக இப்போது வரை நீடித்து வருகிறது.
இதனிடையே, பெய்ஜிங்கில் சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் லூ காங் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
திபெத்தின் பெளத்த மதத் தலைவரான 14-ஆவது தலாய் லாமாவின் உடல்நிலை குறித்த முழு விவரங்கள் எங்களுக்குக் கிடைக்கவில்லை. மறுபிறவி அல்லது மறுஅவதாரம் ஆகியவை திபெத்திய பெளத்த மதத்தின் நம்பிக்கைகள். அவற்றை சீனா தொடர்ந்து மதித்து வருகிறது.
திபெத் பெளத்த மதத்தின் தலைவராகத் தற்போதைய தலாய் லாமா பொறுப்பேற்கும்போது, சீன அரசு அதற்கு அனுமதி வழங்கியது. எனவே, அவருக்கு அடுத்த தலைவர் பொறுப்பேற்கும்போது, சீனாவின் அனுமதியைப் பெற வேண்டும். சீன தேசிய சட்டத்தின்படியே, அடுத்த தலாய் லாமா பொறுப்பேற்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
திபெத்தின் பெளத்த மதத் தலைவர், தலாய் லாமா என்று அழைக்கப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.