850 ஆண்டு பழைமை வாய்ந்த பிரான்ஸ் தேவாலயத்தில் தீ!

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள, 850 ஆண்டுகள் பழைமை வாய்ந்த நாட்டர்டாம் தேவாலயத்தில் திங்கள்கிழமை இரவு தீவிபத்து ஏற்பட்டது.
850 ஆண்டு பழைமை வாய்ந்த பிரான்ஸ் தேவாலயத்தில் தீ!

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள, 850 ஆண்டுகள் பழைமை வாய்ந்த நாட்டர்டாம் தேவாலயத்தில் திங்கள்கிழமை இரவு தீவிபத்து ஏற்பட்டது.
 இந்த விபத்தில் தேவாலயத்தின் பெரும்பாலான கூரைப் பகுதியும், புகழ்பெற்ற அதன் கூம்பு வடிவ கோபுரமும் சேதமடைந்தன.
 இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
 பாரீஸ் நகரில் அமைந்துள்ள, புகழ்பெற்ற நாட்டர்டாம் தேவாலயத்தில் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
 இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு 6.50 மணிக்கு (இந்திய நேரப்படி இரவு 10.20 மணி) அந்த தேவாலயத்தில் திடீரென தீப்பிடித்தது.
 அதனைத் தொடர்ந்து, 12-ஆவது நூற்றாண்டில் மரச் சட்டங்களைக் கொண்டு பெருமளவில் பயன்படுத்திக் கட்டப்பட்ட அந்த தேவாலயத்தில் மளமளவென தீ பரவியது.
 தகவலறிந்ததும் அந்தப் பகுதிக்கு தீயணைப்புப் படையினர் விரைந்து வந்தனர்; சுமார் 400 தீயணைப்பு வீரர்கள் 15 மணி நேரம் கடுமையாகப் போராடி, செவ்வாய்க்கிழமை காலை தீ முழுமையாக அணைத்தனர்.

இந்த விபத்தில், தேவாலயத்தின் 2-இல் 3 பங்கு மேற்கூரை எரிந்து நாசமானது. மேலும், இந்தத் தேவாலயத்துக்கு கம்பீரத்தை அளித்து வந்த புகழ்பெற்ற கூம்பு வடிவ கோபுரம் இடிந்து விழுந்தது.
 அத்துடன், தேவாலயத்தின் உள்பகுதி, மேற்சுவர், ஜன்னல்கள் மற்றும் ஏராளமான கலைப் படைப்புகள் குறிப்பிடத்தக்க அளவில் சேதமடைந்தன.
 எனினும், சுவர்கள், முகப்பில் இருக்கும் இரட்டை மணிக் கோபுரம், புகழ்பெற்ற ஓவியக் கண்ணாடி ஜன்னல் ஆகியவை தீயிலிருந்து தப்பின.
 சதிவேலை காரணமில்லை: இந்த விபத்துக்கு சதிவேலை காரணமாக இருக்க வாய்ப்பில்லை என்று அரசு தலைமை சட்ட அதிகாரி ரெமி ஹெயிட்ஸ் தெரிவித்தார்.

இந்த விபத்து குறித்து 50 பேர் கொண்ட குழு விசாரணை நடத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
 இந்த விபத்துக்கு தேவாலயத்தில் நடைபெற்று வரும் புதுப்பிக்கும் பணி காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
 இதன் காரணமாக, அந்தப் பணியில் ஈடுபட்டு வந்த நிறுவனங்களின் ஊழியர்களிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சம்பவத்தை நேரில் பார்த்தவர்களிடமும் விசாரணை நடைபெற்றது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
 பிரான்ஸின் பழம்பெருமை வாய்ந்த கிறிஸ்தவ தேவாலயமான நாட்டர்டாம் தீவிபத்தில் சேதமடைந்துள்ளது சர்வதேச அளவில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.
 1160-ஆம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டு, 1260-ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட இந்த தேவாலயம், பல்வேறு பெரும் போர்களைச் சந்தித்து மீண்டுள்ளது.
 420 அடி நீளமும், 157 அடி அகலமும் (65,940 சதுர அடி) கொண்ட இந்த பிரம்மாண்ட தேவாலயம், ஐ.நா.வின் யுனெஸ்கோ அமைப்பால் பாரம்பரியச் சின்னமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
 5 ஆண்டுகளில் புனரமைப்போம்

தீவிபத்தில் பெரும் சேதமடைந்த நாட்டர்டாம் தேவாலயம் மீண்டும் புனரமைத்துக் கட்டப்படும் என்று பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் உறுதியளித்துள்ளார்.
 இதுகுறித்து அவர் கூறுகையில், பிரான்ஸ் மக்களின் விருப்பப்படி, நாட்டர்டாம் தேவாலயம் 5 ஆண்டுகளில் மீண்டும் அழகாகக் கட்டப்படும். அந்த தேவாலயம், எங்களது வாழ்வின் மையப்புள்ளி ஆகும் என்றார்.
 அந்த தேவாலயத்தை பழைய நிலைக்கு மீண்டும் கொண்டு வருவதற்கு பல ஆண்டுகள் பிடிக்கும் எனத் தெரிவித்துள்ள நிபுணர்கள், அந்தப் பணிகளை மேற்கொள்வதற்காக பழங்கால ஐரோப்பிய கட்டடக் கலையில் சிறப்புத் தேர்ச்சி பெற்றவர்கள் தேவைப்படுவார்கள் என்று சுட்டிக் காட்டியுள்ளனர்.
 மேலும், இந்த கட்டுமானப் பணிக்கு ஆயிரக்கணக்கான கன மீட்டர் மரச் சட்டங்கள் தேவைப்படும் என்றும் அவர்கள் கூறினர்.
 குவியும் நன்கொடை
 நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்த, கிறிஸ்தவர்கள் மிகப் புனிதமாகக் கருதும் நாட்டர்டாம் தேவாலயத்தை புனரமைக்கும் பணிகளுக்காக நன்கொடைகள் குவிந்து வருகின்றன. அந்தப் பணிகளுக்காக பிரான்ûஸச் சேர்ந்த கெரிங் குழுமம் 10 கோடி யூரோ (சுமார் ரூ.786 கோடி) நன்கொடை அளிப்பதாக அறிவித்ததையடுத்து, அவரது போட்டிக் குழுமமான எல்விஎம்ஹெச்சின் தலைவர் பெர்னார்டு அர்னால்ட், 20 கோடி யூரோ (சுமார் ரூ.1,572 கோடி) நன்கொடை அளிக்க முன்வந்தார்.
 அது தவிர, நன்கொடை வலைதளங்கள் மூலமும், பிரத்யேத வலைதளங்கள் மூலமும் ஏராளமான தொகை குவிந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 பிரான்ஸ் மர விற்பனை நிறுவனமான மர்லின், தேவாலயத்தை புனரமைக்கும் பணிகளுக்காக ஓக் மரச் சட்டங்களை உடனடியாகப் பொருத்தித் தரத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது.
 பிரான்ஸ் மட்டுமன்றி, ஜெர்மனி, இத்தாலி, ரஷியா நாடுகளும் ஐரோப்பிய கட்டடக் கலையில் தங்களுக்குள்ள நிபுணத்தின் மூலம் பிரான்ஸுக்கு உதவியளிக்க முன்வந்துள்ளன.
 தப்பிய "முள் கிரீடம்'!

சிலுவையில் அறையப்பட்டபோது இயேசுபிரான் அணிந்திருந்ததாக நம்பப்படும் முள்கிரீடம், நாட்டர்டாம் தேவாலயத்தில் பாதுகாக்கப்பட்டு வந்தது. தீவிபத்து நேரிட்டபோது அந்த முள்கிரீடம் தேவாலயத்தில்தான் இருந்தது. எனினும், அதனை தீயணைப்புப் படையினர் பத்திரமாக மீட்டனர்.
 இதுதவிர, தேவாலயத்தில் இருந்த ஏராளமன அரும் பொருள்களையும், கலைப் பொருள்களையும் கடும் சிரமத்துக்கிடையே தீயணைப்புப் படையினர் மீட்டனர்.
 தீவிபத்துப் பகுதியிலிருந்து அரிய கலைப் பொருள்களை விரைவில் வெளியே கொண்டு வருவதற்காக, மீட்புக் குழுவினர் தங்களுக்கிடையே மனிதச் சங்கிலியை ஏற்படுத்திக் கொண்டு, ஒவ்வொரு பொருளையும் வேகமாக கைமாற்றி மீட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 மீட்புப் பணிகளின்போது தீயணைப்பு வீரர் ஒருவர் காயமடைந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com