உலகம் 2019

பூமியிலிருந்து பார்க்க முடியாத நிலவின் பின் பகுதியில், சீனாவின் சாங் இ-4 விண்கலம் முதல் முறையாக தரையிறங்கி சாதனை படைத்தது.
உலகம் 2019
Updated on
4 min read


ஜனவரி

3: பூமியிலிருந்து பார்க்க முடியாத நிலவின் பின் பகுதியில், சீனாவின் சாங் இ-4 விண்கலம் முதல் முறையாக தரையிறங்கி சாதனை படைத்தது. மேலும், இதுவரை அறியப்படாத அந்தப் பகுதியின் படங்களையும் அந்த விண்கலம் முதல் முறையாக பூமிக்கு அனுப்பியது.

7: வங்கதேச நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற அவாமி லீக் கட்சித் தலைவர் ஷேக் ஹசீனா, 4-ஆவது முறையாக அந்த நாட்டின் பிரதமராகப் பதவியேற்று சாதனை படைத்தார்.

பிப்ரவரி

10: தங்கள் நாட்டு நீதிமன்றங்களில் அரபி, ஆங்கிலத்துக்கு அடுத்தபடியாக ஹிந்தியை ஆட்சி மொழியாகப் பயன்படுத்தப் போவதாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்தது.

11: தனது கனவு திட்டமான மெக்ஸிகோ எல்லைச் சுவரை எழுப்புவதற்கு நாடாளுமன்ற அனுமதி இல்லாமலேயே நிதி ஒதுக்கீடு செய்வதற்காக, அமெரிக்காவில் அதிபர் டொனால்ட் டிரம்ப் அவசர நிலை அறிவித்தார்.

மார்ச்

10: எத்தியோப்பியன் ஏர்லைன்ஸூக்குச் சொந்தமான போயிங் 737 மேக்ஸ் ரக விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் விழுந்து நொறுங்கியதில், அதிலிருந்த 4 இந்தியர்கள் உள்பட 157 பேரும் உயிரிழந்தனர். ஏற்கெனவே, இதே ரகத்தைச் சேர்ந்த இந்தோனேசியாவின் லயன் ஏர் விமானமும் 2018-ஆம் ஆண்டில் விபத்துக்குள்ளாகி 189 பேர் உயிரிழந்த நிலையில், இந்த விபத்தைத் தொடர்ந்து உலகம் முழுவதும் போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களின் பயன்பாடு நிறுத்திவைக்கப்பட்டது.

15: நியூஸிலாந்தின் கிரைஸ்ட்சர்ச் நகரில் பிரென்டன் டாரன்ட் என்ற வெள்ளை இனவாதி இரு மசூதிகளில் அடுத்தடுத்து நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 51 முஸ்லிம்கள் பலியாகினர். தாக்குதல் நடத்திய பிரென்டன் கைது செய்யப்பட்டு, அவர் மீது தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

25: ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலகுவதற்காக, அந்த அமைப்புடன் பிரதமர் தெரசா மே மேற்கொண்ட செயல்திட்ட ஒப்பந்தத்தை பிரிட்டன் நாடாளுமன்றம் 3-ஆவது முறையாக நிராகரித்தது. அதையடுத்து இந்த விவகாரத்தில் சிக்கல் மேலும் அதிகமானது.

ஏப்ரல்

10: அறிவியல் முன்னேற்றத்தின் ஒரு திருப்புமுனையாக, பால்வெளி மண்டலத்தில் உள்ள மேசியர்-87 என்றழைக்கப்படும் கருந்துளையை விஞ்ஞானிகள் முதல் முறையாக படம் பிடித்து சாதனை படைத்தனர். அந்த கருந்துளைக்கு, "போவேஹி' எனப் பெரிடப்பட்டது.

10: இஸ்ரேல் நாடாளுமன்றத்துக்கு நடைபெற்ற தேர்தலில் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகுவின் கட்சி 4-ஆவது முறையாக அதிக இடங்களைப் பிடித்து சாதனை படைத்தது.

11: லண்டனிலுள்ள ஈக்வடார் தூதரகத்தில் 7 ஆண்டுகளாகத் தஞ்சமடைந்திருந்த விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே, பிரிட்டன் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

11: சூடானில் 30 ஆண்டுகளுக்கும் மேல் ஆட்சி செலுத்தி வந்த அதிபர் ஒமல் அல்-பஷீருக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, அவரை ராணுவம் ஆட்சியிலிருந்து அகற்றியது.

21: ஈஸ்டர் பண்டிகையின்போது இலங்கையின் 3 தேவாலயங்கள் மற்றும் 3 நட்சத்திர விடுதிகளில், நடத்தப்பட்ட மனித வெடிகுண்டுத் தாக்குதல்களில் 359 பேர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலுக்கு இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) அமைப்பு பொறுப்பேற்றது.

மே

10: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஏற்கெனவே எச்சரித்தபடி, 20,000 கோடி டாலர் (ரூ.14.25 லட்சம் கோடி) மதிப்பிலான சீனப் பொருள்கள் மீது 25 சதவீத கூடுதல் இறக்குமதி வரி விதித்தார். இது, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் போர்ப் பதற்றத்தை அதிகரித்தது.

31: வர்த்தக சலுகை பெறும் நாடுகளின் பட்டியலில் இருந்து இந்தியாவை நீக்கும் உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார்.

ஜூன்

7: பிரெக்ஸிட் இழுபறிக்கு தீர்வு காண முடியாததை ஒப்புக் கொண்ட பிரிட்டன் பிரதமர் தெரசா மே, தனது பதவியை ராஜிநாமா செய்தார்.

9: ஹாங்காங்கில் கைது செய்யப்பட்டவர்களை சீனாவுக்கு நாடு கடத்த வகை செய்யும் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த நகரில் மாபெரும் போராட்டங்கள் தொடங்கின.

10: ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் அதிபரும், மறைந்த முன்னாள் பிரதமர் பேநசீர் புட்டோவின் கணவருமான ஆசிஃப் அலி ஜர்தாரி கைது செய்யப்பட்டார்.

24: பிரிட்டனில் தெரசா மே ராஜிநாமாவைத் தொடர்ந்து, முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் போரிஸ் ஜான்ஸன் புதிய பிரதமராகப் பொறுப்பேற்றார்.

ஜூலை

24: காஷ்மீரிலும், ஆப்கானிஸ்தானிலும் தாக்குதல் நடத்துவதற்காக பாகிஸ்தானில் 30,000 முதல் 40,000 பேர் வரையிலானவர்களுக்கு ஆயுதப் பயிற்சி அளிக்கப்பட்டதாகவும், அதனை முந்தைய அரசுகள் மறைத்து வந்ததாகவும் அந்த நாட்டின் பிரதமர் இம்ரான் கான் முதல் முறையாக வெளிப்படையாகத் தெரிவித்தார்.

ஆகஸ்ட்

1: அல்-காய்தா தலைவர் பின்லேடனின் மகனும், அந்த பயங்கரவாத அமைப்பில் பின்லேடனின் வாரிசுமான ஹம்ஸா பின்லேடன், ஆப்கன்-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் தாங்கள் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டதை அமெரிக்கா உறுதி செய்தது.
17: சூடானில் ராணுவ ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான வரலாற்று சிறப்பு மிக்க அதிகார பரவல் ஒப்பந்தத்தில் ஆளும் ராணுவ கவுன்சிலும், ஜனநாயக இயக்கத்தினரும் கையெழுத்திட்டனர்.

செப்டம்பர்

27: சவூதி அரேபியாவுக்கு சுற்றுலா வருவதற்கான விசாக்களை முதல் முறையாக வழங்கவிருப்பதாக அந்த நாடு அறிவித்தது.

அக்டோபர்

1: இராக்கில் வேலைவாய்ப்பை வலியுறுத்தியும், ஊழலுக்கு எதிராகவும் ஆயிரக்கணக்கானவர்கள் போராட்டத்தைத் தொடங்கினர்.

9: சிரியாவில் குர்துப் படையினர் கட்டுப்பாட்டில் உள்ள வடகிழக்குப் பகுதியிலிருந்து அமெரிக்கப் படையினரை திரும்ப அழைக்கப் போவதாக அதிபர் டிரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து, அந்தப் பகுதியிலிருந்து குர்துகளை வெளியேற்றும் நோக்கில் அண்டை நாடான துருக்கி, குர்து நிலைகள் மீது வான்வழித் தாக்குதலைத் தொடங்கியது.

13: துருக்கிப் படையினருக்கும், குர்துகளுக்கும் இடையிலான மோதலைப் பயன்படுத்தி, குர்துகள் கட்டுப்பாட்டிலிருந்து நூற்றுக்கணக்கான இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாத ஆதரவாளர்கள் தப்பினர்.

17: அக்டோபர் 31-ஆம் தேதிக்குள் பிரெக்ஸிட்டை நிறைவேற்ற ஐரோப்பிய யூனியனும், பிரிட்டனும் ஒப்புக் கொண்டன. எனினும், அந்த கெடு தேதி 2020 ஜனவரி 31-ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

18: அமெரிக்க விண்வெளி வீராங்கனைகளான கிறிஸ்டினா கோச், ஜெஸிகா மீர் ஆகிய இருவரும் விண்வெளியில் நடந்து சாதனை படைத்தனர். பெண்களே விண்வெளியில் நடந்து பழுதுபார்ப்புப் பணிகளை மேற்கொண்டது விண்வெளி ஆய்வு வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.

23: ஹாங்காங்கில் பல மாதங்களாக போராட்டம் நடைபெறுவதற்குக் காரணமாக இருந்த நாடுகடத்தல் மசோதாவை அந்த நகர அரசு அதிகாரபூர்மாக வாபஸ் பெற்றது. எனினும், நேரடி தேர்தல், தலைமை நிர்வாகி கேரி லாமின் ராஜிநாமா, அடக்குமுறையில் ஈடுபட்ட போலீஸார் மீது நடவடிக்கை உள்ளிட்ட 5 அம்சங்களை வலியுறுத்தி ஜனநாயக ஆதரவாளர்கள் தங்களது போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

27: இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாத அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல்-பாக்தாதி, தங்களது தாக்குதலில் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.

நவம்பர்

17: இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபட்சவின் சகோதரரும், விடுதலைப் புலிகளுடனான இறுதிக் கட்டப் போரை முன்னின்று நடத்திய முன்னாள் பாதுகாப்புத் துறைச் செயலருமான கோத்தபய ராஜபட்ச வெற்றி பெற்றார்.

20: தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது பதவியை ராஜிநாமா. புதிய பிரதமராக சகோதரர் மகிந்த ராஜபட்சவை அதிபர் கோத்தபய ராஜபட்ச நியமித்தார்.


டிசம்பர்

1: இராக்கில் தொடர்ந்து நடைபெற்று வந்த வன்முறைப் போராட்டங்களின் எதிரொலியாக, தனது பிரதமர் பதவியை அடெல் அப்துல் மஹதி ராஜிநாமா செய்தார்.

13: பிரிட்டன் நாடாளுமன்றத்துக்கு நடைபெற்ற தேர்தலில் பிரதமர் போரிஸ் ஜான்ஸன் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி அபார வெற்றி பெற்றது.

13: அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையிலான வர்த்தகப் போர்ப் பதற்றத்தைத் தணிப்பதற்காக, இரு நாடுகளுக்கும் இடையே முதல்கட்ட வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானதாக அறிவிக்கப்பட்டது.

15: பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான பாரிஸ் ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்வது தொடர்பாக, ஸ்பெயினின் மேட்ரிட் நகரில் 2 வாரங்களாக நடைபெற்று வந்த பேச்சுவார்த்தை, முக்கிய முடிவுகள் எட்டப்படாமல் முடிவடைந்தது.

17: பாகிஸ்தானில் தனது ஆட்சிக் காலத்தின்போது முன்னாள் அதிபர் முஷாரஃப் அவசர நிலை அறிவித்தது தொடர்பாக நடைபெற்று வந்த தேசத் துரோக வழக்கில், அவருக்கு மரண தண்டனை விதித்து இஸ்லாமாபாத் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

18: அமெரிக்க முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன், உக்ரைனில் செய்து வரும் தொழில் தொடர்பாக அவர் மீது ஊழல் விசாரணை நடத்த வேண்டுமென்று உக்ரைன் அரசுக்கு அதிபர் டொனால்ட் நெருக்கடி கொடுத்ததாகக் கூறப்படும் விவகாரத்தில், எதிர்க்கட்சியினர் பெரும்பான்மை வகிக்கும் அமெரிக்க நாடாளுமன்றத்தின் கீழவை டிரம்ப்பை பதவிநீக்கம் செய்வதற்கான தீர்மானங்களை நிறைவேற்றியது. அமெரிக்க வரலாற்றில் கீழவையால் அதிபர் பதவி நீக்கம் செய்யப்பட்டது இது 3-ஆவது முறையாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com