
ஏலத்துக்கு வைக்கப்பட்ட ஹிட்லரின் ஓவியங்களில் ஒன்று.
ஜெர்மனியில் சர்வாதிகாரியாக விளங்கிய அடால்ஃப் ஹிட்லரின் 5 ஓவியங்கள் அண்மையில் ஏலத்துக்கு வந்தன. ஆனால், அவற்றில் ஒன்றைக் கூட யாரும் ஏலம் எடுக்க வராதது ஏல நிறுனத்துக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜெர்மனியில் சர்வாதிகாரியாக இருந்த ஹிட்லர், உலகின் கொடூரமான குணம் படைந்த மனிதர்களில் ஒருவராக இப்போது வரை வர்ணிக்கப்படுகிறார். எனினும், அவர் சிறந்த ஓவியராகவும் திகழ்ந்தவர். இரண்டாம் உலகப் போரின் இறுதியில் அவர் தற்கொலை செய்து கொண்டாலும், அவரது ஓவியங்கள் பல இப்போதும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் தெற்கு ஜெர்மனியின் நியுரெம்பர்க் நகரில் உள்ள ஏல நிறுவனம் ஒன்று, ஹிட்லர் தனது இளம் வயதில் வரைந்த 5 ஓவியங்களை ஏலத்துக்கு முன்வைத்தது. அவற்றுக்கு இந்திய மதிப்பில் சுமார் ரூ.11 லட்சம் முதல் ரூ.45 லட்சம் வரை தொடக்க விலையாக நிர்ணயம் செய்யப்பட்டது. பல நாள்கள் கடந்தும் அதனை வாங்க யாரும் முன்வரவில்லை. இது ஏல நிறுவனத்தைச் சேர்ந்தவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து, ஹிட்லரின் ஓவியங்கள் ஏன் ஏலம் போகவில்லை என்பது குறித்து அந்த ஏல நிறுவனத்தினர் பொதுமக்களிடம் கருத்துக் கேட்டனர் அதில், பொதுவாக வெளிநாடுகளில் மட்டுமின்றி, ஜெர்மனியிலும் கூட ஹிட்லர் வெறுக்கத்தக்க மனிதராகவே இப்போதும் உள்ளார் என்பது தெரியவந்தது. இதுதவிர, கலைப் பொருள்கள், பழங்கால பொருள்களை ஏலம் எடுப்பதில் ஆர்வம் உள்ளவர்களிடமும் இந்த ஏலத்தில் பங்கேற்காதது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு, அந்த ஓவியங்கள் போலியாக இருக்கலாம் என்ற சந்தேகமும் ஒரு காரணம் என்று தெரியவந்தது.
இதையடுத்து, அந்த ஓவியங்கள் ஹிட்லர் வரைந்ததுதான் என்பதை உரிய ஆதாரங்களுடன் நிரூபித்து மீண்டும் அவற்றை ஏலத்துக்கு முன்வைக்க இருப்பதாக அந்த ஏல நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.