
ரஷியாவின் பெலுசியா கூபா நகரில் புகுந்த கரடிகள்.
ரஷியாவில் ஊருக்குள் ஒரே நேரத்தில் 50-க்கும் மேற்பட்ட பனிக்கரடிகள் புகுந்ததால் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
ரஷியாவில் அணு ஆயுத சோதனைகள் நடத்தப்படும் ஜெம்லியா தீவு, ஆர்க்டிக் பிரதேசத்தை ஒட்டி அமைந்துள்ளது. இந்த தீவில் உள்ள பெலுசியா கூபா என்ற நகரத்துக்குள் ஒரே நேரத்தில் 50-க்கும் மேற்பட்ட பனிக்கரடிகள் புகுந்துள்ளன.
அந்த ஊருக்குள் பனிக்கரடிகள் உணவு தேடி அங்குமிங்கும் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிகின்றன.
அவற்றை விரட்டுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ள அரசு நிர்வாகம், அவசரநிலையை அறிவித்துள்ளது. கரடிகள், குடியிருப்புகளின் வாயிற்கதவுகள் முன் நின்று சத்தமிடுகின்றன. இதனால், பொதுமக்கள் பீதியடைந்து வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர்.
பெற்றோர் தங்களது பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்ப முடியாமல் தவிக்கிறார்கள். பொதுமக்கள் அத்திவாசியப் பொருள்களை வாங்குவதற்கு கடைக்குச் செல்ல முடியாமல் அவதிப்படுகிறார்கள். நகரில் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளதாக, நகராட்சி துணைத் தலைவர் அலெக்சாண்டர் மினாயேவ் கூறினார்.
மேலும், இதுகுறித்து நகராட்சித் தலைவர் ஜிகன்ஷா முசின் கூறுகையில், நான் கடந்த 1983-ஆம் ஆண்டில் இருந்து இங்கு வசித்து வருகிறேன். இதுவரை, ஒரே நேரத்தில் அதிக அளவிலான பனிக்கரடிகள் ஊருக்குள் புகுந்ததை நான் கண்டதில்லை. அந்தக் கரடிகள் மக்களை பின் தொடர்ந்து விரட்டும் என்பதாலும், குடியிருப்பு வளாகத்துக்குள் நுழைவதாலும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றார்.
இந்நிலையில், அந்த நகருக்குள் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. கரடிகள் சுற்றித் திரிந்தாலும் அவற்றின் மீது தாக்குதல் நடத்தக் கூடாது என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டாலும், கார்களில் இருந்து ஒலி எழுப்பினாலும் அந்தக் கரடிகள் எவ்வித சலனமுமின்றி இருப்பதால், அவற்றை விரட்டுவதற்கான அடுத்த கட்ட முயற்சியில் அரசு நிர்வாகம் இறங்கியுள்ளது.