
அண்டை நாடுகளின் மனிதாபிமான உதவிகள் மக்களை சென்றடையாமல் வெனிசூலா ராணுவம் தடுப்பது மனிதகுலத்துக்கு எதிரான செயல் என அந்த நாட்டின் இடைக்கால அதிபராக அறிவித்துக் கொண்ட ஜுவான் குவாய்டோ தெரிவித்துள்ளார். வெனிசூலாவின் எதிர்க்கட்சி தலைவரான இவரை அந்த நாட்டின் இடைக்கால அதிபராக அமெரிக்கா உள்ளிட்ட 50 நாடுகள் அங்கீகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
எனவே இவருக்கும் அங்கு அதிபராக இருக்கும் நிகோலஸ் மடூரோவுக்கும் இடையேயான மோதல் வலுத்து வருகிறது. வெனிசூலாவில் ஏற்பட்ட பொருளாதார சீர்குலைவால் மக்கள் தாங்க முடியாத துயரத்துக்கு ஆளாகியுள்ளனர். உணவு, மருந்து உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட கிடைக்காமல் பொதுமக்கள் அல்லல்பட்டு வருகின்றனர்.
இவர்களுக்கு உதவுவதற்காக அண்டை நாடுகள் உதவிகள் செய்ய முன்வந்தும் அதனை ஏற்க நிகோலஸ் மடூரோ மறுத்து வருகிறார்.
அமெரிக்காவிலிருந்து வெனிசூலாவுக்கு உணவு மற்றும் மருந்துகளை ஏற்றிக் கொண்டு வந்த வாகனங்கள் கொலம்பியாவின் கூகுடா எல்லைப் பகுதியில் கடந்த மூன்று நாள்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதற்கு இரு நாடுகளையும் இணைக்கும் பாலத்தை வெனிசூலா ராணுவத்தினர் மூடிவிட்டதே முக்கிய காரணம்.
வெளிநாட்டு உதவிகள் எதையும் வரவிடாத அளவுக்கு வெனிசூலா ராணுவத்தினர் முட்டுக் கட்டைகளை ஏற்படுத்தியுள்ளனர். இது, சர்வதேச மனிதாபிமான உதவிகள் கிடைக்கும் என்று காத்திருந்த ஏராளமான வெனிசூலா மக்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
வெளிநாடுகளின் உதவிகளை வெனிசூலாவுக்குள் அனுமதிக்க வேண்டும் என கோரி அந்த நாட்டின் எல்லைப் பகுதியில் ஏராளமான மருத்துவர்கள் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், இடைக்கால அதிபராக அங்கீகரிக்கப்பட்டுள்ள குவாய்டோ கூறியதாவது:
உள்நாட்டில் துன்பத்தில் சிக்கி தவித்து வரும் மக்களுக்கு அண்டை நாடுகள் வழங்கும் உதவிகளை சென்றடையாமல் வெனிசூலா ராணுவத்தினர் தடுப்பது மனிதகுலத்துக்கு எதிரான குற்றமாகும். தடையை யார் ஏற்படுத்துகிறார்களோ அவர்களின் செயல் ஏறக்குறைய இனப்படுகொலைக்கு ஒப்பானது. எனவே, போராட்டக்காரர்களின் உயிரிழப்புகளுக்கு ராணுவத்தினரே பொறுப்பேற்க வேண்டும் என்றார் அவர்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G