தென் சீனக் கடலில் சர்ச்சைக்குரிய இடத்தில் இரு அமெரிக்க போர்க் கப்பல்கள்

தென் சீனக் கடலில், சர்ச்சைக்குரிய தீவுக் கூட்டங்கள் பகுதியில் இரு அமெரிக்க போர்க் கப்பல்கள் திங்கள்கிழமை பயணித்ததாக ஊடகத் தகவல் தெரிவிக்கிறது. அமெரிக்காவின்
தென் சீனக் கடலில் சர்ச்சைக்குரிய இடத்தில் இரு அமெரிக்க போர்க் கப்பல்கள்


தென் சீனக் கடலில், சர்ச்சைக்குரிய தீவுக் கூட்டங்கள் பகுதியில் இரு அமெரிக்க போர்க் கப்பல்கள் திங்கள்கிழமை பயணித்ததாக ஊடகத் தகவல் தெரிவிக்கிறது. அமெரிக்காவின் இந்த செயல், சீனாவுடனான அதன் உறவில் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது.
அமெரிக்க செய்தி நிறுவனமான சிஎன்என் வெளியிட்டுள்ள செய்தியின்படி, அமெரிக்க கடற்படையைச் சேர்ந்த ஏவுகணைத் தடுப்பு போர்க் கப்பல்களான யுஎஸ்எஸ் ஸ்ப்ருவன்ஸ் மற்றும் யுஎஸ்எஸ் பிரெபிள் ஆகிய இரண்டு கப்பல்களும், ஸ்ப்ராட்லி தீவுகள் பகுதியிலிருந்து 12 கடல் மைல்கள் தொலைவில் பயணித்துள்ளன. அந்த இடத்தை, சர்வதேச சட்டத்தின் கீழ் தடையற்ற பகுதியாக அமெரிக்கா குறிப்பிட்டு வருவது நினைவுகூரத்தக்கது. 
அமெரிக்கா-சீனா இடையே ஏற்கெனவே வர்த்தகப் போர் நிலவி வருகிறது. சீன இறக்குமதி பொருள்கள் மீதான வரியை வரும் மார்ச் 1-ஆம் தேதி முதல் 10 சதவீதத்தில் இருந்து, 25 சதவீதமாக அதிகரிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. எனினும், அதுதொடர்பாக இரு நாடுகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தென் சீனக் கடலில் சர்ச்சைக்குரிய தீவுக் கூட்டங்கள் பகுதியில் அமெரிக்க போர்க் கப்பல்கள் பயணித்த நிகழ்வால் சீனா ஆத்திரமடைய வாய்ப்புள்ளது.
அமெரிக்க போர்க் கப்பல்களின் இந்த நடவடிக்கை குறித்து அந்நாட்டு கடற்படையின் 7-ஆவது படைப் பிரிவு செய்தித் தொடர்பாளரும், கமாண்டருமான கிளே டாஸ், சிஎன்என் நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், தென் சீனக் கடலில் சர்ச்சைக்குரிய தீவுக் கூட்டங்கள் பகுதியில் சீனா செலுத்தி வரும் மிதமிஞ்சிய அதிகாரத்துக்கு சவால் அளிக்கவும், சர்வதேச சட்டத்தின் கீழ் அப்பகுதி அனைத்துத் தரப்பினரும் அணுகக் கூடிய வகையில் இருப்பதை உறுதி செய்யவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
இந்த நடவடிக்கையை சர்வதேச சட்டத்தின் அடிப்படையிலேயே அமெரிக்கா மேற்கொண்டுள்ளது. அந்த சட்டம் அனுமதிக்கும் இடங்களில் அமெரிக்கா தனது விமானங்களையும், கப்பல்களையும் இயக்கும் என்பதை இந்த நிகழ்வு பறைசாற்றுகிறது என்று கூறியுள்ளார். 
தென் சீனக் கடல் பகுதியில் அமெரிக்க போர்க் கப்பல்கள் இவ்வாறு பயணிப்பது, இந்த ஆண்டில் இது 2-ஆவது நிகழ்வாகும். கடந்த ஜனவரி மாதம் அமெரிக்க கடற்படையின் யுஎஸ்எஸ் மெக் கேம்ப்பெல் என்ற கப்பல், தென் சீனக் கடல்பகுதியன் பராசெல் தீவுகளில் இருந்து சுமார் 12 கடல் மைல் தொலைவில் பயணித்தது குறிப்பிடத்தக்கது.
தைவான், பிலிப்பின்ஸ், புருனே, மலேசியா, வியத்நாம் ஆகிய நாடுகளை ஒட்டிய வகையில் தென் சீனக் கடல் பகுதியில் இருக்கும் தீவுக் கூட்டங்களுக்கு அந்த நாடுகள் உரிமை கொண்டாடி வருகின்றன. எனினும், அதில் சீனாவே மேலாதிக்கம் செலுத்தி வருகிறது.
அமைதியை சீர்குலைக்க முயற்சி: அமெரிக்கா தனது இரு போர்க் கப்பல்களை தென் சீனக் கடல் பகுதியில் சர்ச்சைக்குரிய இடத்தில் செலுத்தியதன் மூலமாக, அமைதியை சீர்குலைக்க முயற்சிப்பதாக சீனா விமர்சித்துள்ளது.
இதுதொடர்பாக சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹுவா சன்யிங் கூறுகையில், தென் சீனக் கடல் பகுதியில் நிலவும் அமைதியை சீர்குலைத்து, அங்கு பதற்றத்தை ஏற்படுத்த அமெரிக்கா முயற்சிக்கிறது. ஆத்திரமூட்டும் வகையிலான இந்த நடவடிக்கைகளை அமெரிக்கா நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com