
சிங்கப்பூரில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் முறையாக சந்தித்துப் பேசிய டிரம்ப் மற்றும் கிங் ஜோங்-உன் (கோப்புப் படம்).
வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உனை இரண்டாவது முறையாகச் சந்திக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
தங்கள் நாட்டின் மீது அமெரிக்கா தொடர்ந்து பொருளாதாரத் தடைகளை விதித்தால், அணு ஆயுதங்களைக் கைவிடும் முடிவை மாற்றிக் கொள்ள வேண்டியிருக்கும் என்று கிம் ஜோங்-உன் மறைமுகமாக மிரட்டல் விடுத்த நிலையில், டிரம்ப் இவ்வாறு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் டொனால்ட் டிரம்ப் கூறியதாவது:
கிம் ஜோங்கிடமிருந்து அருமையான கடிதம்: வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உனிடமிருந்து அருமையான கடிதம் எனக்கு வந்துள்ளது.
அதுபோன்ற மிகச் சிறந்த கடிதத்தை இதுவரை அவர்கள் எழுதியதில்லை.
வட கொரியா மற்றும் அதன் அதிபருடனான நமது பேச்சுவார்த்தையில் மிகச் சிறப்பான முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது.
வட கொரியாவுக்கு நல்ல பொருளாதார எதிர்காலம் உள்ளது. அந்த நாட்டின் அதிபர் கிம் ஜோங்-உனை இரண்டாவது முறையாகச் சந்திக்க ஆவலாக உள்ளேன்.
அந்தச் சந்திப்புக்கான நாள் வெகு தொலைவில் இல்லை என்றார் டொனால்ட் டிரம்ப்.
தென் கொரியா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில், அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணை சோதனைகளை வட கொரியா கடந்த ஆண்டின் இறுதிவரை தொடர்ந்து நடத்தி வந்தது.
இதனால், வட கொரியாவுக்கும், அமெரிக்க-தென் கொரிய கூட்டணிக்கும் இடையே கடும் பதற்றம் நிலவி வந்தது.
இந்தச் சூழலில், தென் கொரியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக்கில் வட கொரியா பங்கேற்றதைத் தொடர்ந்து, இரு கொரிய நாடுகளுக்கும் இடையே பதற்றம் தணிந்து இணக்கமான சூழல் ஏற்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன், தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன் ஆகியோரிடையிலான வரலாற்றுச் சிறப்பு மிக்க சந்திப்புகள் இரண்டு முறை நடைபெற்றன.
இதற்கிடையே, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பையும் கிம் ஜோங்-உன் சிங்கப்பூரில் கடந்த ஜூன் மாதம் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது, கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதங்களற்ற பிரதேசமாக்குவது உள்ளிட்ட 4 அம்ச தீர்மானத்தில் இரு தலைவர்களும் கையெழுத்திட்டனர்.
இந்த நிலையில், அந்தத் தீர்மானத்தை நிறைவேற்றுவதற்காக வட கொரியா போதிய அளவு செயல்படவில்லை என்று அமெரிக்காவும், இந்த விவகாரத்தில் அமெரிக்கா மிரட்டல் போக்கைக் கடைப்பிடிப்பதாக வட கொரியாவும் ஒன்றையென்று குற்றம் சாட்டி வருகின்றன.
இந்தச் சூழலில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இவ்வாறு கூறியுள்ளார்.