
இலங்கையில் கடந்த மாதம் ஈஸ்டர் பண்டிகையின்போது நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக விசாரணை மேற்கொள்ள, 3 நபர்கள் அடங்கிய சிறப்புக் குழுவை அதிபர் சிறீசேனா கடந்த மாதம் 21ஆம் தேதி அமைத்தார்.
ஒய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி விஜித் கே. மலால்கோடா தலைமையிலான இந்தக் குழு, குண்டுவெடிப்புக்குப் பிறகு பதவி விலகிய பாதுகாப்புச் செயலர் ஹேமசிறீ ஃபெர்னாண்டோ, தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள புஜித் ஜெயசுந்தரா உள்பட ஏராளமான அதிகாரிகள், முன்னாள் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி வந்தது.
இந்த குண்டுவெடிப்பு நடப்பதற்கு முன்பாகவே இலங்கையில் ஐ.எஸ். இயக்கத்தினர் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாக இந்தியா எச்சரித்ததாகவும், இதுபற்றி அதிபர் சிறிசேனாவிடம் தெரிவித்ததாகவும் இலங்கையின் தேசிய உளவுத்துறை தலைவர் சிசிரா மெண்டிஸ் கூறியிருந்தார்.
உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த பயங்கரவாதத் தாக்குதலில் 253 பேர் உயிரிழந்தனர்; 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
இந்நிலையில் தேசிய உளவுத்துறை தலைவர் சிசிரா மெண்டிஸை அதிபர் சிறீசேனா பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். எனினும், அந்த நடவடிக்கைக்கான காரணம் குறித்து அவர் எதுவும் தெரிவிக்கவில்லை.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G