மெக்ஸிகோ பொருள்கள் மீதான கூடுதல் வரி: காலவரையின்றி நிறுத்திவைத்தார் டிரம்ப்

சட்டவிரோத அகதிகள் விவகாரத்தில் மெக்ஸிகோ பொருள்களுக்கு கூடுதல் வரி விதிக்கும் தனது முடிவை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நிறுத்திவைத்துள்ளார்.
மெக்ஸிகோ பொருள்கள் மீதான கூடுதல் வரி: காலவரையின்றி நிறுத்திவைத்தார் டிரம்ப்

சட்டவிரோத அகதிகள் விவகாரத்தில் மெக்ஸிகோ பொருள்களுக்கு கூடுதல் வரி விதிக்கும் தனது முடிவை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நிறுத்திவைத்துள்ளார்.
 இரு நாடுகளுக்கிடையே நடைபெற்ற வர்த்தகப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
 இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள "அமெரிக்க - மெக்ஸிகோ கூட்டு பிரகடனத்தில்' தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
 மெக்ஸிகோ வழியாக அமெரிக்காவில் அடைக்கலம் கோரி வரும் அகதிகளை ஏற்பது குறித்து பரிசீலிக்கப்படும்வரை, அவர்களை மெக்ஸிகோவுக்கே திருப்பி அனுப்பும் திட்டத்தை அமெரிக்கா உடனடியாக விரிவுபடுத்துகிறது.
 அதனை ஏற்றுக் கொண்டுள்ள மெக்ஸிகோ, தங்களிடம் திருப்பி அனுப்பப்படும் அகதிகளுக்கு வேலைவாய்ப்பு, மருத்துவ மற்றும் கல்வி வசதி செய்து தர ஒப்புக் கொண்டுள்ளது.
 மேலும், தங்கள் நாட்டிலிருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவுக்கு அகதிகள் வருவதை இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான நடவடிக்கைகளின் மூலம் தடுப்பதாகவும் மெக்ஸிகோ ஒப்புக் கொண்டது.
 அதையடுத்து, இந்த விவகாரத்தில் மெக்ஸிகோவிலிருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு கூடுதல் வரி விதிக்கும் அமெரிக்காவின் முடிவு காலவரையின்றி ஒத்திவைக்கப்படுகிறது என்று அந்தப் பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 எல் சால்வடார், ஹோண்டுரஸ், கெளதமாலா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த அகதிகள் அமெரிக்கா வருவதற்கு அதன் அண்டை நாடான மெக்ஸிகோவைப் பயன்படுத்தி வருகின்றனர்.
 அத்தகைய அகதிகள் அமெரிக்கா வருவது அதிகரித்து வரும் நிலையில், அவர்களைத் தடுத்து நிறுத்தத் தவறியதாக மெக்ஸிகோ மீது அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டி வருகிறார்.
 இந்தச் சூழலில், தங்கள் நாட்டு வழியாக சட்டவிரோத குடியேற்றவாசிகள் அமெரிக்காவுக்குள் நுழைவதை மெக்ஸிகோ கட்டுப்படுத்தும் வரை, அந்த நாட்டுப் பொருள்களுக்கு வரும் திங்கள்கிழமையிலிருந்து (ஜூன் 10) 5 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் கடந்த வாரம் கூறியிருந்தார்.
 அதனைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பிறகு தற்போது இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com