
பிரிட்டன் பிரதமர் பதவிக்கான போட்டியில் முதல் சுற்று வாக்கெடுப்பில் முன்னாள் அமைச்சர் போரிஸ் ஜான்சன் அதிக வாக்குகள் பெற்று அடுத்த சுற்று வாக்கெடுப்புக்கு முன்னேறியுள்ளார்.
ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலகுவதில் (பிரெக்ஸிட்) இழுபறி நீடித்து வருவதன் எதிரொலியாக, பிரதமர் பதவியை ராஜிநாமா செய்யவதாக பிரதமர் தெரசா மே அண்மையில் அறிவித்தார். இதையடுத்து பிரதமர் பதவிக்கு ஆளும் கன்சர்வேடிவ் கட்சி எம்.பி.க்களிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இறுதியாக அக்கட்சியின் 10 எம்.பி.க்கள், பிரதமர் பதவிக்கான போட்டியில் களமிறங்கினர்.
இதையடுத்து, புதிய பிரதமரைத் தேர்வு செய்வதற்கான முதல் கட்ட ரகசிய வாக்கெடுப்பு பிரிட்டன் மக்களவையில் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆளும் கன்சர்வேடிவ் கட்சி எம்.பி.க்கள் இந்த வாக்கெடுப்பில் பங்கேற்றனர். இதில், போரிஸ் ஜான்சன் அதிபட்சமாக 114 வாக்குகள் பெற்றார். வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெர்மி ஹன்ட் 43 வாக்குகள் பெற்று இரண்டாவது இடமும், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மிஷெல் கோவ் 37 வாக்குகள் பெற்று மூன்றாவது இடமும் பிடித்தனர்.
அடுத்த சுற்றுக்கு வாக்கெடுப்பில் கலந்து கொள்ள குறைந்தது 17 வாக்குகளாவது பெற வேண்டும் என்ற நிலையில் மார்க் ஹார்பர், ஆண்ட்ரியா லெட்ஸம், எஸ்தர் மெக்வீ ஆகியோர் அதைவிடக் குறைவான வாக்குகள் பெற்று போட்டியில் இருந்து வெளியேறினர். இதனால் இரண்டாவது சுற்று வாக்கெடுப்பில் 7 பேர் மட்டுமே பங்கேற்க உள்ளனர். இரண்டாவது சுற்று வாக்கெடுப்பு அடுத்த வாரம் நடைபெறவுள்ளது.