
நாடு முழுவதும் உள்ள சிறைகளில் இருந்து 490 தலிபான் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக ஆப்கானிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.
தலிபான்களுடனான அமைதிப் பேச்சுவார்த்தையில் தேக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், அமைதிப் பேச்சுவார்த்தையை முன்னெடுக்கும் விதமாக, சிறையில் இருந்த தலிபான் அமைப்பு கைதிகளை ஆப்கன் அரசு விடுவித்துள்ளது. இதுதொடர்பாக அந்நாட்டு அரசு செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ஈகைத் திருநாள் தினத்தன்று, நல்லெண்ணத்தின் அடிப்படையில் சிறையில் உள்ள தலிபான் கைதிககள் 887 பேரை விடுவிக்க வேண்டும் என்று அதிபர் அஷ்ரஃப் கனி அறிவித்திருந்தார். அதன் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் உள்ள சிறைகளில் இருந்து உடல்நலம் குன்றியவர்கள் மற்றும் சிறை தண்டனை நிறைவடைவதற்கு ஓராண்டுக்கும் குறைவான காலம் உடைய 490 தலிபான்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்றார். எனினும், மீதம் உள்ள தலிபான் கைதிகள் எப்போது விடுவிக்கப்படுவார்கள் என்பது குறித்து அவர் தெரிவிக்கவில்லை.
கடந்த 18 ஆண்டுகளாக தலிபான் பயங்கரவாதிகளுக்கும், அரசு ஆதரவுப் படையினருக்கும் இடையே உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. ஆப்கானிஸ்தானின் பல பகுதிகளை கைப்பற்றி தங்களது கட்டுப்பாட்டில் தலிபான் பயங்கரவாதிகள் வைத்துள்ளனர்.