ஈரான் மதத் தலைவருடன் ஷின்ஸோ அபே சந்திப்பு: ஈரான்-அமெரிக்கா இடையே மத்தியஸ்தம்

ஈரான்-அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் செய்யும் முயற்சியில் இறங்கியுள்ள ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே, ஈரான் நாட்டின் மதத் தலைவர் அயதுல்லா
ஈரான் மதத் தலைவர் அயதுல்லா அலி கமேனியுடன் வியாழக்கிழமை பேச்சுவார்த்தை நடத்திய ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே.  உடன் ஈரான் அதிபர் ஹசன் ரெளஹானி.
ஈரான் மதத் தலைவர் அயதுல்லா அலி கமேனியுடன் வியாழக்கிழமை பேச்சுவார்த்தை நடத்திய ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே.  உடன் ஈரான் அதிபர் ஹசன் ரெளஹானி.


ஈரான்-அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் செய்யும் முயற்சியில் இறங்கியுள்ள ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே, ஈரான் நாட்டின் மதத் தலைவர் அயதுல்லா அலி கமேனியைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
ரஷியா, சீனா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளுடன் ஈரான் கடந்த 2015-ஆம் ஆண்டு ஏற்படுத்திக்கொண்ட அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக அமெரிக்கா கடந்த ஆண்டு அறிவித்தது. இதையடுத்து ஈரான் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகள் விதித்தது. ஈரானால் அச்சுறுத்தல் நிலவி வருவதாகத் தெரிவித்து, பாரசீக வளைகுடா பகுதியில் தங்கள் நாட்டுப் போர்க் கப்பல்களையும் அமெரிக்கா நிறுத்தியுள்ளது. 
இதையடுத்து, அணுசக்தி ஒப்பந்தத்தின் விதிமுறைகளைக் கடைப்பிடிக்கப் போவதில்லை என ஈரானும் மிரட்டல் விடுத்துவருகிறது. பாரசீக வளைகுடாப் பகுதியில் போர் ஏற்பட்டால், கச்சா எண்ணெய் போக்குவரத்துக்கு முக்கிய வழித்தடமாகத் திகழும் ஹோர்முஸ் ஜலசந்தியை மூடிவிடுவோம் என்றும் ஈரான் எச்சரித்துவருகிறது. இந்த விவகாரத்தில், இரு நாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. 
இந்நிலையில், ஈரான்-அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் செய்யும் முயற்சியில் இறங்கியுள்ள ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே, ஈரானில் 3 நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அந்நாட்டு மதத் தலைவர் கமேனியை வியாழக்கிழமை ஷின்ஸோ அபே சந்தித்துப் பேசினார்.
டிரம்ப் தகுதியான நபர் இல்லை: இது தொடர்பாக, கமேனி வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபேவைச் சந்தித்துப் பேசினேன் என்று குறிப்பிட்டிருந்தார். பேச்சுவார்த்தையின்போது, அபேவிடம் கமேனி கூறியதாவது:
பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தகுதியான நபர் இல்லை. அவருடன் பேச்சுவார்த்தை நடத்த நான் தயாராக இல்லை என்றார்.
முன்னதாக, ஷின்ஸோ அபே, கமேனி, ஈரான் அதிபர் ஹசன் ரெளஹானி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களுக்கு புதன்கிழமை பேட்டி அளித்தனர். அப்போது அபே கூறுகையில், மத்திய கிழக்குப் பகுதியில் பதற்றம் அதிகரித்து வருகிறது. யாரும் எதிர்பாராத விதமாக இந்தப் பிரச்னை ஏற்பட்டுவிட்டது. பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்த ஈரான் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம். பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்தும் முயற்சியியை ஜப்பான் மேற்கொண்டு வருகிறது. அதன் காரணமாகவே நான் ஈரான் வந்துள்ளேன் என்றார்.
தக்க பதிலடி: அதிபர் ரெளஹானி கூறுகையில், அமெரிக்கா உள்ளிட்ட எந்த நாட்டுக்கு எதிராகவும் நாங்கள் போரைத் தொடங்க மாட்டோம். ஆனால், ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com