மசூத் அஸாரின் மகன், சகோதரர்  உள்பட 44 பேர் கைது: பாகிஸ்தான் திடீர் நடவடிக்கை

புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து எல்லை தாண்டிய பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்த பாகிஸ்தானுக்கு சர்வதேச நெருக்கடி அதிகரித்து வரும் சூழலில், அந்தத் தாக்குதலுக்குக் காரணமான ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பின் தலைவர்
பாகிஸ்தான்  உள்துறை அமைச்சர் ஷேர்யர் கான் அஃப்ரிடி
பாகிஸ்தான்  உள்துறை அமைச்சர் ஷேர்யர் கான் அஃப்ரிடி
Updated on
2 min read

புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து எல்லை தாண்டிய பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்த பாகிஸ்தானுக்கு சர்வதேச நெருக்கடி அதிகரித்து வரும் சூழலில், அந்தத் தாக்குதலுக்குக் காரணமான ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அஸாரின் மகன், சகோதரர் உள்பட 44 பேரை பாகிஸ்தான் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து இஸ்லாமாபாதில் செவ்வாய்க்கிழமை  நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் உள்துறை அமைச்சர் ஷேர்யர் கான் அஃப்ரிடி கூறியதாவது:
புல்வாமா தாக்குதல் குறித்த விவர அறிக்கையை பாகிஸ்தான் அரசிடம் இந்தியா கடந்த வாரம் அளித்தது.
அதில், மசூத் அஸாரின் மகன் ஹமது அஸார், சகோதரர் முஃப்தி அப்துர் ரவூஃப் ஆகியோர்களது பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
இந்த நிலையில், பயங்கரவாதத் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக அந்த இருவர் உள்பட 44 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது போன்ற கைது நடவடிக்கைகள் இரண்டு வாரங்களுக்கு தொடர்ந்து மேற்கொள்ளப்படும். கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராகக் கிடைக்கும் ஆதாரங்களின் அடிப்படையில் அவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
மசூத் அஸாரின் சகோரர் உள்ளிட்டோரை கைது செய்துள்ளதற்கு எந்த நெருக்கடியும் காரணம் அல்ல. தடை செய்யப்பட்ட அமைப்புகளின் உறுப்பினர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் எங்களது வழக்கமான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவே அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எந்த நாட்டின் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்துவதற்கும் பாகிஸ்தான் மண்ணைப் பயன்படுத்தக் கூடாது என்பதே எங்களது கொள்கையாகும் என்றார் அவர்.
இதற்கிடையே, வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் முகமது ஃபைசல் கூறுகையில், தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கு எதிராக தொடங்கப்பட்டுள்ள நடவடிக்கைகளில், அவற்றின் உறுப்பினர்கள் கைது செய்யப்படுவதுடன் அவர்களது சொத்துகளும் முடக்கப்படும் என்று தெரிவித்தார்.
இதுகுறித்து உள்துறைச் செயலர் அஸம் சுலைமான் கான் கூறியதாவது:
கடந்த 2014-ஆம் ஆண்டு பெஷாவர் பள்ளித் தாக்குதலுக்குப் பிறகு, தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான தேசிய செயல் திட்டம் உருவாக்கப்பட்டது.
அந்த திட்டத்தின் அடிப்படையிலேயே, ஜெய்ஷ்-ஏ-முகமது தலைவரின் மகன் மற்றும் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தேசிய செயல்திட்டத்தின் கீழ்  ஜெய்ஷ்-ஏ-முகமது மட்டுமன்றி, தடை செய்யப்பட்ட பிற அமைப்புகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றார் அவர்.
இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் மத்திய ரிசர்வ் காவல் படையினர் (சிஆர்பிஎஃப்) சென்று கொண்டிருந்த வாகனங்களின் மீது வெடிபொருள் நிரப்பிய காரை மோதி நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத தற்கொலைத் தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்தனர்.நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியலையை ஏற்படுத்திய இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்புதான் காரணம் என்று இந்தியா குற்றம் சாட்டியது. எனினும், அதனை பாகிஸ்தான் மறுத்து வந்தது.
இந்த நிலையில், பாகிஸ்தானின் பாலாகோட் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப் படை விமானங்கள் கடந்த மாதம் 26-ஆம் தேதி குண்டு வீச்சு நடத்தின.
அதற்குப் பதிலடியாக, இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் விமானங்களை, இந்திய விமானப் படை துரத்திச் சென்று பாகிஸ்தானின் எஃப்16 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது.
அதே நேரரத்தில், பாகிஸ்தான் கட்டுப்பாட்டுப் பகுதியில் இந்திய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டு, அதிலிருந்த விமானி அபிநந்தனை பாகிஸ்தான் ராணுவம் கைது செய்தது.
எனினும், அவர் இந்த மாதம் 1-ஆம் தேதி பாகிஸ்தானால் விடுவிக்கப்பட்டார். இந்தச் சம்பவங்களால் அணு ஆயுத நாடுகளான இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழுமையான போர் ஏற்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டது.
அதையடுத்து, பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பாகிஸ்தானுக்கு நெருக்கடி கொடுத்தன.
இந்தச் சூழலில், ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அஸாரின் மகன், சகோதரர் உள்ளிட்டோரை பாகிஸ்தான் அரசு கைது செய்துள்ளது.
எனினும், அவர்கள் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்துக்குப் பதிலாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், விசாரிப்பதற்காகவும் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளது குறித்து இந்திய அதிகாரிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
மேலும், ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பினருக்குப் பாதுகாப்பு அளிக்கும் நோக்கத்திலும் அவர்கள் கைது செய்யப்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் சிலர் தெரிவித்தனர்.

"24 மணி நேரத்தில் ஹஃபீஸ் சயீதின் அமைப்புகளுக்குத் தடை' 

2008-ஆம் ஆண்டின் மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹஃபீஸ் சயீதின் ஜமாத்-உத்-தாவா மற்றும் அதன் அறக்கட்டளை அமைப்பான ஃபலா-இ-இன்சானியத் ஆகியவை இன்னும் 24 மணி நேரத்தில் தடை செய்யப்படும் என்று பாகிஸ்தான் உள்துறைச் செயலர் அஸம் சுலைமான் கான் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

அந்த இரு அமைப்புகளையும் தடை செய்துவிட்டதாக பாகிஸ்தான் அரசு கடந்த மாதம் 21-ஆம் தேதி தெரிவித்திருந்தது.

எனினும், அந்த நாட்டு பயங்கரவாதத் தடுப்பு அமைப்பின் வலைதளத்தில் அவ்விரு அமைப்புகளும் கண்காணிப்புப் பட்டியலில் மட்டுமே இடம் பெற்றுள்ளன. இந்த நிலையில், இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, அந்த இரு அமைப்புகளும் 24 மணி நேரத்துக்குள் தடை செய்யப்படும் என்று உள்துறைச் செயலர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com