நியூஸிலாந்தில் தாக்குதல் துப்பாக்கிகளுக்குத் தடை

நியூஸிலாந்தில் தாக்குதல் துப்பாக்கிகளுக்குத் தடை

மசூதி துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து,  தாக்குதல் துப்பாக்கிகள்,  ராணுவப் பயன்பாட்டுத் துப்பாக்கிகள் உள்ளிட்டவற்றுக்கு நியூஸிலாந்து அரசு தடை விதித்துள்ளது.


மசூதி துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து,  தாக்குதல் துப்பாக்கிகள்,  ராணுவப் பயன்பாட்டுத் துப்பாக்கிகள் உள்ளிட்டவற்றுக்கு நியூஸிலாந்து அரசு தடை விதித்துள்ளது.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பிரென்டன் டார்ரன்ட் என்பவர், கடந்த வெள்ளிக்கிழமை, கிறைஸ்ட்சர்ச் பகுதியில் உள்ள 2 மசூதிகளுக்குள் புகுந்து நிகழ்த்திய துப்பாக்கிச்சூட்டில், 5 இந்தியர்கள் உள்பட 50 பேர் கொல்லப்பட்டனர். 
இச்சம்பவம் நியூஸிலாந்திலும், மற்ற வெளிநாடுகளிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், மக்கள் வைத்துள்ள தாக்குதல் துப்பாக்கிகள், ராணுவத்தில் பயன்படுத்தப்படும் தானியங்கி ரக துப்பாக்கிகள் உள்ளிட்டவற்றுக்கு நியூஸிலாந்து அரசு தடை விதித்துள்ளது. 
இது தொடர்பாக, அந்நாட்டுப் பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
தாக்குதல் துப்பாக்கிகள், ராணுவத்தில் பயன்படுத்தப்படும் தானியங்கி ரக துப்பாக்கிகள் உள்ளிட்டவற்றை மக்கள் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 
இந்தத் தடை உடனடியாக அமலுக்கு வருகிறது. இந்த ஆயுதங்களை இனி மக்கள் யாரும் வாங்க முடியாது. 
எனவே, ஆயுதங்கள் வைத்திருக்க அனுமதி கோரி விண்ணப்பிப்பதில், எந்தப் பலனும் இருக்காது. 
நியூஸிலாந்தைச் சேர்ந்த பெரும்பாலான மக்கள் இதற்கு ஆதரவு தெரிவிப்பார்கள் என நம்புகிறேன். 
எனக்கு அதில் அதீத நம்பிக்கை உள்ளது என்றார். அரசின் இந்த நடவடிக்கைக்குப் பெரும்பாலான மக்கள் ஆதரவும், மகிழ்ச்சியும் தெரிவித்தனர்.
ஆயுதங்கள் மீதான தடை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சைமன் பிரிட்ஜெஸ் வெளியிட்ட அறிக்கையில், அரசின் இந்த நடவடிக்கைக்கு முழுமையாக ஆதரவு அளிக்கிறோம். 
இந்த விவகாரத்தில் அரசுடன் இணைந்து பணியாற்றத் தயாராக உள்ளோம். 
கடந்த வாரம் நிகழ்ந்த தாக்குதல் சம்பவம் அனைவரையும் ஒருங்கிணைத்துள்ளது என்று குறிப்பிட்டிருந்தார்.
இதனிடையே, தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்த 50 பேரின் அடையாளங்களும் தெரியவந்துள்ளதாகக் காவல் துறையினர் தெரிவித்தனர். 
இதையடுத்து, பலியானோரின் உறவினர்களை அதிகாரபூர்வமாகத் தொடர்பு கொண்டு அரசு தகவல் அளித்து வருவதாக அதிகாரிகள் கூறினர்.

அமெரிக்காவில் கோரிக்கை
நியூஸிலாந்தில் ஆயுதங்கள் பயன்பாட்டுக்குத் தடை விதிக்கப்பட்டதை அடுத்து, அமெரிக்காவிலும் இதுபோன்ற தடையை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்தது. இது குறித்து, அமெரிக்காவின் செனட் சபையைச் சேர்ந்த ஜனநாயகக் கட்சி உறுப்பினர் பெர்னி சாண்டர்ஸ் தனது சுட்டுரைப் பக்கத்தில், துப்பாக்கி கலாசாரத்தை ஒழிக்க இதுபோன்ற நடவடிக்கைகளே தேவை. இந்த விவகாரத்தில் நியூஸிலாந்தைப் பின்பற்றி, அமெரிக்காவில் துப்பாக்கிகள் விற்கப்படுவதையும், விநியோகிக்கப்படுவதையும் தடை செய்வோம் என்று பதிவிட்டார்.
அமெரிக்காவிலும் துப்பாக்கித் தாக்குதல்கள்  அரங்கேறி வருகின்றன. எனினும், துப்பாக்கித் தடைக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள், துப்பாக்கிகள் வைத்துக்கொள்ள, தங்களுக்கு அரசியல் சாசனத்தில் வழிவகை உள்ளது என்று தெரிவித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com