நியூஸிலாந்து மசூதி தாக்குதல் சம்பவம்: போலீஸாரால் சுற்றிவளைக்கப்பட்டவர் மரணம்

நியூஸிலாந்தில் போலீஸாரால் சுற்றிவளைக்கப்பட்ட சந்தேகத்துக்குரிய நபர் மர்மமான முறையில் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அண்மையில் நடைபெற்ற மசூதித் தாக்குதலில் அவருக்குத் தொடர்பு உள்ளதா? என்பது
Updated on
1 min read


நியூஸிலாந்தில் போலீஸாரால் சுற்றிவளைக்கப்பட்ட சந்தேகத்துக்குரிய நபர் மர்மமான முறையில் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அண்மையில் நடைபெற்ற மசூதித் தாக்குதலில் அவருக்குத் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
நியூஸிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் நகரிலுள்ள இரு மசூதிகளில், இந்த மாதம் 15-ஆம் தேதி இளைஞர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு நடத்திய இனவெறித் தாக்குதலில் 50 பேர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில், அந்த நகரில் 54 வயதுடைய நபர் ஒருவரின் நடவடிக்கைகள் சந்தேகப்படும் வகையில் அமைந்துள்ளதாக பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில், அவரது வீட்டில் போலீஸார் செவ்வாய்க்கிழமை இரவு சோதனையிட்டு ஏராளமான ஆயுதங்களையும், வெடிபொருள்களையும் பறிமுதல் செய்தனர்.
அதனைத் தொடர்ந்து, அந்த நபர் வந்துகொண்டிருந்த காரை சுற்றிவளைத்த போலீஸார், அவரை சரணடையுமாறு வலியுறுத்தினர்.
எனினும், சுமார் 3 மணி நேரத்துக்கு நீடித்த அந்த முற்றுகைக்குப் பிறகு போலீஸார் அந்த நபர் அருகே சென்று பார்த்தபோது வெட்டுக் காயத்துடன் அவர் மயங்கிக் கிடந்தார். சிறிது நேரத்தில் அந்தக் காயம் காரணமாக அவர் உயிரிழந்தார்.
எனினும், அவருக்கு அந்த வெட்டுக் காயம் ஏற்பட்டதற்கான காரணம் குறித்து போலீஸார் தெரிவிக்கவில்லை.
சந்தேக நபர் இருந்த காரில் துப்பாக்கியோ, வெடிபொருள்களோ எதுவும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
எனினும், கடந்த 15-ஆம் தேதி நடைபெற்ற மசூதித் தாக்குதலில் சந்தேக நபருக்குத் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே, இஸ்லாம் மதத்தின் பெயரால் நடத்தப்படும் பயங்கரவாதத்தைத் தடுப்பதில் மட்டுமே நியூஸிலாந்து உளவுத் துறையினர் முழு கவனம் செலுத்தியதாகவும், அதன் காரணமாகவே மசூதிகளில் நடைபெற்ற வெள்ளை இனவெறித் தாக்குதலைத் தடுக்க அவர்கள் தவறிவிட்டதாகவும் கூறப்படுவது குறித்து அந்த நாட்டு அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
மேலும், மசூதித் தாக்குதலுக்குப் பிறகு உளவுத் துறை அதிகாரிகளுக்கு இதுவரை இல்லாத கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அந்தத் துறைக்கான அமைச்சர் ஆண்ட்ரூ லிட்டில் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com