
அணு ஆயுதங்களை கைவிடுவது தொடர்பாக வட கொரியா, அமெரிக்காவுடன் கடந்த ஓராண்டுக்கும் மேலாக பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், கடந்த 2 தினங்களில் 2-ஆவது முறையாக அணுஆயுதச் சோதனை நடவடிக்கையில் வடகொரியா ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டுள்ளது.
நீண்ட தூரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணைகளின் சோதனை சனிக்கிழமை நடத்தப்பட்டுள்ளது. போர் ஒத்திகை நிகழ்வாக நடத்தப்பட்ட இந்தச் சோதனையை அந்நாட்டு அதிபர் கிம் ஜோங் உன் நேரடியாக பார்வையிட்டார்.
அடையாளம் தெரியாத குறைந்த தூரம் (70 முதல் 200 கிலோ மீட்டர் தூரம்) சென்று தாக்கும் ஏவுகணை ஒன்றை வடகொரியா, சனிக்கிழமை சோதனை செய்துள்ளது. அந்நாட்டின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் உள்ள வோன்ஸன் என்ற நகரத்தில் இருந்து உள்ளூர் நேரப்படி காலை 9:06 மணியளவில் கிழக்கு நோக்கி இந்த ஏவுகணை செலுத்தப்பட்டதாக தென் கொரியா குற்றம்சாட்டியுள்ளது.
வடகொரியாவின் இந்த அணு ஆயுதச் சோதனையின் உண்மைத் தன்மை குறித்து ஆராய்ந்து வருவதாக தென் கொரிய மற்றும் அமெரிக்க தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடைசியாக 2017-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வட கொரியா இப்படி ஏவுகணையை நடத்தியுள்ளது.
முன்னதாக, அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததையடுத்து, ஏவுகணைகளை ஏவப் பயன்படுத்தப்படும் சோஹே ஏவுதளத்தை வடகொரியா சீரமைத்து வருவது செயற்கைக்கோள் படத்தின் மூலம் தெரிய வந்துள்ளதாக அமெரிக்க அரசின் ஆலோசனை அமைப்பான சிஎஸ்ஐஎஸ் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.