
வட கொரியா மீண்டும் குறுகிய தொலைவு ஏவுகணை சோதனையில் ஈடுபட்டதாக தென் கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது.
அணு ஆயுதங்களைக் கைவிடுவதாக கடந்த ஆண்டு வட கொரியா அறிவித்த பிறகு, அந்த நாடு குறுகிய தொலைவு ஏவுகணைச் சோதனையில் ஈடுபட்டுள்ளது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
அணு சக்திப் பேச்சுவார்த்தையை முன்னெடுத்துச் செல்ல அமெரிக்காவுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இந்தச் சோதனை நடத்தப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து தென் கொரிய முப்படைகளின் தலைமைத் தளபதி பார்க் ஹன்-கி கூறியதாவது:
வட கொரியாவின் கிழக்குக் கடற்கரை நகரமான வோன்சன் அருகே உள்ள ஹோடோ பகுதியிலிருந்து, கடலை நோக்கி குறுகிய தொலைவு ஏவுகணைகள் வீசப்பட்டன.
சனிக்கிழமை காலை 9.06-லிருந்து, 9.27 மணி வரை அந்த ஏவுகணைகள் வட கிழக்கு திசையில் ஏவப்பட்டன. 70 கி.மீ. முதல் 200 கி.மீ. வரை பாய்ந்த அந்த ஏவுகணைகள், ஜப்பான் கடலில் விழுந்தன என்றார் அவர்.
ஐ.நா. தடையை மீறி அணு ஆயுதங்களையும், ஏவுகணைகளையும் வடகொரியா சோதித்து வந்ததையடுத்து, அந்த நாட்டின் மீது அமெரிக்கா கடும் பொருளாதாரத் தடைகளை விதித்தது.
இந்த நிலையில், வட கொரியா அணு ஆயுதங்களைக் கைவிடத் தயாராக இருப்பதாக அந்த நாட்டு அதிபர் கிம் ஜோங்-உன் அறிவித்ததைத் தொடர்ந்து, அந்த நாட்டுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே சமரசப் பேச்சுவார்த்தைகள் தொடங்கின.
அமெரிக்க அதிபர் டிரம்ப்பை கிம் ஜோங்-உன் இரு முறை சந்தித்துப் பேசியும், அணு ஆயுதங்களைக் கைவிடும் பணிகளை வட கொரியா எதிர்பார்த்த அளவு மேற்கொண்டால்தான் அந்த நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகள் குறைக்கப்படும் என்று அமெரிக்கா திட்டவட்டமாகத் தெரிவித்தது.
இதனால், இருதரப்புப் பேச்சுவார்த்தையில் சுணக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், அந்தப் பேச்சுவார்த்தையை மீண்டும் முன்னெடுத்துச் செல்ல அமெரிக்காவுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் குறுகிய தொலைவு ஏவுகணைகளை வட கொரியா சோதித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
கடைசியாக, கடந்த 2017-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வட கொரியா குறுகிய தொலைவு ஏவுகணைகளை சோதித்தது என்பது நினைவுகூரத்தக்கது.