
"பானி' புயல் பாதிப்பால் அதிக அளவில் உயிரிழப்பு நேரிடாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இந்தியா சிறப்பான முறையில் மேற்கொண்டிருப்பதாக ஐ.நா. அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது.
கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக சக்திவாய்ந்த "பானி' புயல் ஒடிஸாவை தாக்கியது. இதில் 8 பேர் உயிரிழந்தனர். பலத்த மழை காரணமாக கடலோரப் பகுதியையொட்டி அமைந்துள்ள புரி நகரின் பெரும்பாலான பகுதிகள் மிகவும் சேதமடைந்தன. சுமார் 11 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர்.
இந்திய வானிலை ஆய்வு மையம் முன்கூட்டியே மிக சக்திவாய்ந்த புயல் வரவிருப்பதாக எச்சரித்ததைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டன. கடலோரப் பகுதிகளில் வசித்துவந்தவர்கள் பாதுகாப்பான இடத்துக்கு வெளியேற்றப்பட்டனர்.
இதனால், புயல் தாக்கியபோது அதிக எண்ணிக்கையிலான உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
இந்நிலையில், ஜெனீவாவில் செயல்படும் ஐ.நா. பேரிடர் பாதிப்பு குறைப்பு அலுவலகத்தின் (யுஎன்ஐஎஸ்டிஆர்) தலைவர் மமி மிஸுடோரி கூறுகையில், "பேரிடர் தடுப்பு நடவடிக்கைகளை இந்திய அரசும், ஒடிஸா அரசு நிர்வாகமும் சிறப்பாக மேற்கொண்டன' என்றார்.
யுஎன்ஐஎஸ்டிஆர் செய்தித்தொடர்பாளர் டேனிஸ் மெக்கிளீன் கூறுகையில், "முன்கூட்டியே துல்லியமாக எச்சரித்ததுடன், இந்திய அதிகாரிகள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டனர். சுமார் 10 லட்சம் பேர் பாதுகாப்பான இடத்துக்கு வெளியேற்றப்பட்டனர்' என்றார்.
பருவநிலை மாற்றத்தால் இதுபோன்ற இயற்கை பேரிடர் பாதிப்புகள் நேரிடுகின்றன என்று யுனிசெஃப் அமைப்பின் பருவநிலை மாற்றத்துக்கான மூத்த ஆலோசகர் கௌதம் நரசிம்மன் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:
பருவநிலை மாற்றத்தால் கடல் நீரின் அளவு அதிகரிக்கிறது. இதனால், புயல் உருவாகி அத்துடன் பலத்த மழையும் பெய்கிறது. கடலோரப் பகுதிகளிலும், அதையொட்டி உள்ள நகரங்களிலும் அதிக பாதிப்பு ஏற்படுகிறது. ஒடிஸாவில் 2.8 கோடி பேர் வசிக்கின்றனர். இவர்களில் ஒரு கோடி பேர் சிறார்கள். பருவநிலை பாதிப்பு காரணமாக சிறார்களுக்கு மலேரியா, காலரா உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன.
இதை உலக நாடுகளின் தலைவர்கள் உடனடியாக உணர்ந்து சுற்றுச்சூழலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கௌதம் நரசிம்மன் தெரிவித்தார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...