தாக்குதலுக்குள்ளான எண்ணெய் கப்பல்களுக்கு பெருத்த சேதமில்லை: செயற்கைக்கோள் படம் மூலம் தகவல்

ஐக்கிய அரபு அமீரகம் அருகேயுள்ள கடல் பகுதியில், சவூதி அரேபியாவுக்குச் சொந்தமான இரண்டு எண்ணெய் கப்பல்கள் உள்பட 4 எண்ணெய் கப்பல்களை மர்ம நபர்கள் தாக்கியதாக கூறப்பட்ட
தாக்குதலுக்குள்ளான எண்ணெய் கப்பல்களுக்கு பெருத்த சேதமில்லை: செயற்கைக்கோள் படம் மூலம் தகவல்


ஐக்கிய அரபு அமீரகம் அருகேயுள்ள கடல் பகுதியில், சவூதி அரேபியாவுக்குச் சொந்தமான இரண்டு எண்ணெய் கப்பல்கள் உள்பட 4 எண்ணெய் கப்பல்களை மர்ம நபர்கள் தாக்கியதாக கூறப்பட்ட நிலையில், இந்த தாக்குதலால் எண்ணெய் கப்பல்கள் பெரிய அளவில் சேதமடையவில்லை என்று செயற்கைகோள் புகைப்படங்கள் மூலமாகத் தெரிய வந்துள்ளது.
முன்னதாக, சவூதி அரேபியாவின் இரண்டு எண்ணெய் கப்பல்கள், நார்வேக்கு சொந்தமான ஒரு எண்ணெய் கப்பல், அமீரகத்தின் ஒரு எண்ணெய் கப்பல் உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் ஞாயிற்றுக்கிழமை தாக்கியதாக செய்தி வெளியானது.
ஈரான் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகள் விதித்துள்ள விவகாரத்தில், இரு நாடுகளுக்கும் இடையே ஏற்கெனவே பதற்றமான சூழல் நிலவும் நிலையில், அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளியான சவூதி அரேபியாவின் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. இந்த தாக்குதலுக்கு ஈரானோ அல்லது அதன் கூட்டாளி நாடுகளோ காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், தாக்குதலுக்கு உள்ளான கப்பல்களுக்கு பெருத்த அளவில் சேதமில்லை என்று அபுதாபியில் உள்ள ஸ்கைநியூஸ் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. அத்துடன், செயற்கைக்கோள் படங்களையும் அந்தத் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.
அந்தப் படங்களை ஆய்வு செய்ததில், அமீரகத்துக்கு சொந்தமான எண்ணெய் கப்பலில் மட்டும் கண்ணுக்கு தெரியும் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது தெரிய வந்தது. அதனால், எண்ணெய் கசிவு ஏற்பட வாய்ப்புள்ளது. மற்ற 3 கப்பல்களிலும் கண்ணில் படும் அளவுக்கு பெருத்த சேதமில்லை. நார்வே எண்ணெய் கப்பலின் உடல் பகுதியில் ஓட்டை ஏற்பட்டுள்ளது. எனினும் கப்பல் மூழ்கும் அளவுக்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறுகையில், 4 கப்பல்களிலும் 5-10 அடி அளவுக்கு ஓட்டை ஏற்பட்டுள்ளதாகவும், வெடிபொருள்களை கொண்டு இந்த நாசவேலையை செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது என்றார்.
விசாரணை: இந்த தாக்குதல் குறித்த விசாரணைக்கு உதவுமாறு அமெரிக்காவுக்கு ஐக்கிய அரபு அமீரகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.  தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறுகையில், அனைவரும் பாதிக்கப்படும் வகையில் ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால், அது ஈரானுக்கு மிகவும் மோசமான பின்விளைவை ஏற்படுத்தும் என்று எச்சரித்தார்.
செய்யாத குற்றம்: எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு ஈரான் மீது குற்றம்சுமத்தப்பட்டு வரும் நிலையில், நாங்கள் செய்யாத குற்றத்துக்கு எங்கள் மீது பழி சுமத்தப்படுகிறது. கடவுளின் அருளுடன் எங்களது எதிரிகளை வீழ்த்துவோம் என்று ஈரான் அதிபர் ஹஸன் ரெளஹானி தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com