வாட்ஸ்அப் மூலம் செல்லிடப் பேசிகளில் ஊடுருவல்

புகழ் பெற்ற சமூக ஊடகமான கட்செவி (வாட்ஸ்அப்) மூலம் செல்லிடப் பேசிகளில் ஊடுருவி, அதிலுள்ள தகவல்களைத் திருடும் ரகசிய மென்பொருள் பதிவிறக்கம் செய்யப்படுவதாக தகவல் வெளியாகி பரபரப்பை
வாட்ஸ்அப் மூலம் செல்லிடப் பேசிகளில் ஊடுருவல்
Updated on
1 min read


புகழ் பெற்ற சமூக ஊடகமான கட்செவி (வாட்ஸ்அப்) மூலம் செல்லிடப் பேசிகளில் ஊடுருவி, அதிலுள்ள தகவல்களைத் திருடும் ரகசிய மென்பொருள் பதிவிறக்கம் செய்யப்படுவதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து வாட்ஸ்அப் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையை மேற்கோள் காட்டி, அமெரிக்காவிலிருந்து வெளியாகும் ஃபைனான்ஸியல் டைம்ஸ் நாளிதழ் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
உலகம் முழுவதும் 150 கோடி பேர் வாட்ஸ்அப் சமூக ஊடகத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். அந்தச் செயலியின் தொழில்நுட்பப் பாதுகாப்புக் குறைபாட்டைப் பயன்படுத்தி, அதற்குள் ஊடுருவும் ரகசிய மென்பொருளை மர்ம நபர்கள் உருவாக்கியுள்ளனர்.
வாட்ஸ்அப் பயனாளர்களை அந்தச் செயலியைக் கொண்டு செல்லிடப்பேசியில் அழைப்பதன் மூலம், ரகசிய மென்பொருள் செல்லிடப்பேசிக்குள் செலுத்தப்படுகிறது.
அவ்வாறு ஊடுருவும் அந்த  மென்பொருள், செல்லிடப் பேசியின் பல்வேறு ரகசியத் தகவல்களைத் திருடி குறிப்பிட்ட நபர்களுக்கு அனுப்ப முடியும்.
ஆன்டிராய்டு செல்லிடப் பேசிகள் மட்டுமன்றி, ஆப்பிள் போன்கள், ஐ-போன்கள் போன்றவற்றிலும் வாட்ஸ்அப் செயலி மூலம் இந்த ஊடுருவல் நடத்த முடியும்.
இதுகுறித்து தகவல் வெளியானதும், தனது செயலியில் இருந்த பாதுகாப்புக் குறைபாட்டை உடனடியாக சரி செய்த வாட்ஸ்அப் நிறுவனம், சரிசெய்யப்பட்ட புது வடிவ  செயலியை வெளியிட்டது.
மேலும், தங்களது செல்லிடப் பேசிகளின் பாதுகாப்பை  உறுதி செய்துகொள்வதற்காக, புது வடிவ செயலியை பதிவிறக்கம் செய்து, வாட்ஸ்அப்பை புதுப்பித்துக்கொள்ளும்படி பயனாளர்களுக்கு வாட்ஸ்அப் நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.
எனினும்,  இந்த ஊடுருவலால் எத்தனை வாட்ஸ்அப் பயனாளர்கள் பாதிக்கப்பட்டனர் என்ற விவரத்தை அது வெளியிடவில்லை.
இஸ்ரேல் நிறுவனம்: வாட்ஸ்அப்பில் ஊடுருவும் மென்பொருள் நிரல்களை ஆய்வு  செய்த நிபுணர்கள், அந்த நிரல்கள் இஸ்ரேலைச் சேர்ந்த என்எஸ்ஓ குழுமம் என்ற நிறுவனத்தின் நிரல்களை ஒத்திருப்பதாகத் தெரிவித்தனர்.
ஏற்கெனவே, பல்வேறு நாடுகளின் அரசுகளுக்காக ஊடுருவல் மென்பொருள்களை உருவாக்கியுள்ள அந்த நிறுவனம்தான் வாட்ஸ்அப் ஊடுருவல் மென்பொருளையும் உருவாக்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.
எனினும், பயங்கரவாதம் மற்றும் குற்றங்களைத் தடுப்பதற்காக மட்டுமே நாடுகளின் அரசுகளுக்கு தாங்கள் உதவுவதாகவும், தங்களது மென்பொருள் தவறாகப் பயன்படுத்தப்பட்டிருந்தால், அதனைத் தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் என்எஸ்ஓ குழுமம் உறுதியளித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com