
வெனிசூலா சிறையொன்றில் ஏற்பட்ட கலவரத்தில் 29 கைதிகள் உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
போர்ச்சுகீஸா மாகாணம், அகரிகுவா நகரிலுள்ள காவல் நிலைய சிறைச்சாலையில் கைதிகள் வெள்ளிக்கிழமை திடீர் கலவரத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள் சிறையிலிருந்து தப்பிச் செல்வதைத் தடுப்பதற்காக வந்த போலீஸார் மீது கைதிகள் துப்பாக்கியால் சுட்டும், கையெறி குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர்; இதில் 19 போலீஸார் காயமடைந்தனர்.
அதனைத் தொடர்ந்து போலீஸார் மேற்கொண்ட நடவடிக்கையில் 29 கைதிகள் உயிரிழந்தனர்.
வெனிசூலா சிறைகளில் கொள்ளளவைவிட பல மடங்கு கைதிகள் அடைத்து வைக்கப்படுவதும், போதிய அடிப்படை வசதிகள் அளிக்கப்படாததும் இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடப்பதற்கு காரணமாகக் கூறப்படுகிறது.