காஷ்மீர் விவகாரத்துக்கு தீர்வு காண போரை உபாயமாக கருதக்கூடாது: பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்

காஷ்மீர் விவகாரத்துக்குத் தீர்வு காண்பதற்கு போரை உபாயமாக கருதக் கூடாது என்று பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மஹமூத் குரேஷி தெரிவித்தார்.
காஷ்மீர் விவகாரத்துக்கு தீர்வு காண போரை உபாயமாக கருதக்கூடாது: பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்
Updated on
1 min read

காஷ்மீர் விவகாரத்துக்குத் தீர்வு காண்பதற்கு போரை உபாயமாக கருதக் கூடாது என்று பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மஹமூத் குரேஷி தெரிவித்தார்.
 காஷ்மீர் விவகாரத்தை முன்வைத்து இந்தியாவுடன் அணு ஆயுதப் போர் மூள வாய்ப்பிருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மிரட்டல் விடுத்து வரும் நிலையில், அதற்கு மாறாக அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் குரேஷி கருத்து வெளியிட்டுள்ளார்.
 இதுகுறித்து பிபிசி உருது தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:
 பாகிஸ்தான் ஒருபோதும் போர்க்குணமுள்ள கொள்கையை கடைப்பிடித்தது இல்லை. அமைதிக்கே எப்போதும் முன்னுரிமை கொடுக்கிறது. பாகிஸ்தானில் தற்போது ஆட்சியிலுள்ள அரசு, இந்தியாவிடம் பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பான கோரிக்கையை தொடர்ந்து முன்வைத்தது. இதற்கு அணு ஆயுதம் வைத்துள்ள 2 அண்டை நாடுகள், போரில் ஈடுபடும் ஆபத்தான காரியத்தை செய்யக் கூடாது என்பதுதான் காரணம்.
 காஷ்மீர் விவகாரத்துக்குத் தீர்வு காண்பதற்கு போரை ஒரு உபாயமாகக் கொள்ளக் கூடாது. காஷ்மீர் விவகாரம், சர்வதேச ரீதியிலான விவகாரம் ஆகும். இந்தியா-பாகிஸ்தான் இடையேயான இருதரப்பு உறவு சம்பந்தப்பட்டது கிடையாது என்று குரேஷி கூறினார். ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வகை செய்யும் 370-ஆவது சட்டப் பிரிவை மத்திய அரசு ரத்து செய்தது. மேலும், ஜம்மு-காஷ்மீரை 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் சட்டத்தையும் கொண்டு வந்தது.
 முன்னதாக, அமெரிக்காவின் "நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் இம்ரான் கான் கூறுகையில், "காஷ்மீர் விவகாரம்
 தொடர்பான இந்தியாவின் முடிவை உலக நாடுகள் தடுக்கவில்லையெனில், இரு அணு ஆயுத நாடுகளும் நேரடி போருக்கு செல்ல நேரிடும். நான் பாகிஸ்தான் பிரதமராகத் தேர்வானதும், தெற்காசியப் பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்துவதற்கு அதிக முன்னுரிமை கொடுப்பது என்று தீர்மானித்தேன். இதை மையமாகக் கொண்டு அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பான கோரிக்கையை இந்தியாவுக்கு விடுத்தேன். ஆனால் அக்கோரிக்கையை இந்தியா நிராகரித்து விட்டது' என்று தெரிவித்திருந்தார். கடந்த 2016-ஆம் ஆண்டில் பதான்கோட் விமானப்படை தளத்தில் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து பாகிஸ்தானுடன் பேச்சு நடத்துவதை இந்தியா ரத்து செய்து விட்டது. அமைதிப் பேச்சுவார்த்தையும், பயங்கரவாதமும் ஒரே நேரத்தில் சாத்தியமில்லை என்று இந்தியா தொடர்ந்து தெரிவித்து வருகிறது.
 ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் பயங்கரவாதிகள் கடந்த பிப்ரவரி மாதம் நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் 40 பேர் பலியாகினர். இதற்குப் பதிலடியாக பாகிஸ்தானின் பாலாகோட்டில் உள்ள ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பின் பயங்கரவாத முகாம் மீது இந்திய விமானப்படை விமானங்கள் குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியது. இந்தச் சம்பவத்தால் இருநாடுகளிடையே பதற்றம் நிலவி வந்தது.
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com