
கடந்த 2016ஆம் ஆண்டில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷியா தலையிட்டதாகக் கூறப்படும் விவகாரத்துடன் தொடர்புடைய ரஷிய உளவாளியை அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ பாதுகாத்து வருவதாக ஊடகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷியா தலையிட்டது, டிரம்ப்பின் வெற்றிக்கு உதவியதாக ஏற்கெனவே குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், சிஎன்என் தொலைக்காட்சி, நியூயார்க் டைம்ஸ் நாளிதழ், இது தொடர்பான புதிய தகவல்களை வெளியிட்டுள்ளன. அதன்படி, ரஷிய அதிபர் விளாதிமீர் புதினுடன் நெருங்கிய தொடர்பில் இருந்து, அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெறும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்த உளவாளி ஒருவரை, சிஐஏ பாதுகாத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தத் தேர்தலில் ரஷியத் தலையீடு குறித்த ஆதாரங்கள் அந்த உளவாளி வசம் இருப்பதாகவும், புதினுடைய அறிவுறுத்தலின் பேரில் அந்த உளவாளி அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையிட்டதாகவும் அமெரிக்க ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. எனினும், சிஎன்என், நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டிருக்கும் இந்த தகவலை சிஐஏ மறுத்துள்ளது. அந்த ஊடகச் செய்திகள் முற்றிலும் தவறானவை என்று சிஐஏ தெரிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் மாளிகை ஊடகச் செயலாளர் ஸ்டெபனி கிரிஷமும் இந்த செய்தியை மறுத்துள்ளார். அவர் கூறுகையில், இந்தச் செய்தியில் இடம்பெற்றுள்ள தகவல்கள் யாவும் தவறானவை என்பது மட்டுமல்ல, அவை பலரின் உயிருக்கு ஆபத்து விளைவிப்பதாகவும் உள்ளன என்றார்.
இந்நிலையில், ரஷிய அதிபரின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், உளவாளி என்று கருதப்படும் நபர், அதிபர் மாளிகையில் பணியாற்றியது உண்மைதான். அவர் உயர் பொறுப்பு எதுவும் வகிக்கவில்லை. மேலும், சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் பணியிலிருந்து நீக்கப்பட்டுவிட்டார் என்றார்.