
இணையவழி வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் சீனாவைச் சேர்ந்த அலிபாபா குழுமத்தின் தலைவர் பதவியிலிருந்து ஜாக் மா செவ்வாய்க்கிழமை விலகினார்.
சீனாவில் பெரும் பணக்காரர்களில் ஒருவரும், மிகச் சிறந்த தொழிலதிபருமான ஜாக் மா (55), ஓராண்டுக்கு முன்னரே தனது பதவி விலகல் குறித்து அறிவித்திருந்தார். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை தனது 55ஆவது பிறந்த தினத்தின்போது தாம் நிறுவிய அலிபாபா குழுமத்தின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
ஜாக் மா தலைவர் பதவியிலிருந்து விலகிய போதிலும், அலிபாபா பங்குதாரர்களின் உறுப்பினர்களில் ஒருவராக தொடர்ந்து நீடிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காசீனா இடையேயான வர்த்தகப் போர் மத்தியில் வேகமாக மாற்றமடைந்து வரும் இணையதள வர்த்தகத் துறை நிச்சயமற்ற சூழலை எதிர்கொண்டு வரும் சமயத்தில் ஜாக் மா பதவி விலகியுள்ளது அந்த நிறுவனத்துக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.
ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வந்த ஜாக் மா, அமெரிக்க சிறுவணிகர்களை சீன ஏற்றுமதியாளர்களுடன் ஒருங்கிணைக்கும் வகையில் அலிபாபா நிறுவனத்தை கடந்த 1999ஆம் ஆண்டு தொடங்கினார்.
பின்னர், ஆன்லைன் வங்கி, பொழுதுபோக்கு, கிளவுட் கம்ப்யூட்டிங் என பிற சேவைகளில் களமிறங்கிய அலிபாபா குழுமம் கடந்த ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் 1,670 கோடி டாலர் (சுமார் ரூ.1.20 லட்சம் கோடி) வருவாய் ஈட்டியது. இதில், உள்நாட்டு வர்த்தகத்தின் பங்களிப்பு மட்டும் 66 சதவீதம் அளவுக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.