
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அந்நாட்டு பாதுகாப்பு ஆலோசகர் ஜான் பால்டனை பணி நீக்கம் செய்து செவ்வாய்கிழமை நடவடிக்கை எடுத்தார். ஜான் பால்டன் அளித்த ஆலோசனைகளின் மீது தனக்கு ஏற்பட்ட அதிருப்தி காரணமாகவே இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக டிரம்ப் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியதாவது:
பாதுகாப்பு ஆலோசகர் ஜான் பால்டன் அளித்த பல்வேறு ஆலோசனைகளின் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. மேலும் இவற்றில் அதிருப்தியும், கடும் கருத்து வேறுபாடுகளும் இருந்தன. அவருடைய நடவடிக்கைகளின் மேல் இதே நிலை தான் இதர அதிகாரிகளுக்கும் காணப்பட்டது.
எனவே ராஜிநாமா செய்யுமாறு ஜான் பால்டனை அறிவுறுத்தினேன். இதையடுத்து அவரும் தனது ராஜிநாமா கடிதத்தை சமர்ப்பித்தார். ஜான் பால்டன் இதுவரை ஆற்றிய பணிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்று தனது ட்விட்டர் பக்கதத்தில் டிரம்ப் பதிவிட்டார்.
இந்நிலையில், நான் ராஜிநாமா செய்வதாகக் கூறியும் அதிபர் டிரம்ப் தான் வேண்டாம் என்று மறுத்ததோடு, அதுகுறித்து நாளை பேச்சுவார்த்தை நடத்திக்கொள்ளலாம் என்று தெரிவித்ததாக பணி நீக்கம் செய்யப்பட்ட ஜான் பால்டன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.