அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தைக்குத் தயார்: தலிபான்கள்

அமெரிக்காவுடன் தடைபட்டுள்ள அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதற்கு தாங்கள் தயாராக இருப்பதாக தலிபான் பயங்கரவாதிகள் தெரிவித்தனர்.
அப்பாஸ் ஸ்டானிக்ஸாய்
அப்பாஸ் ஸ்டானிக்ஸாய்


அமெரிக்காவுடன் தடைபட்டுள்ள அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதற்கு தாங்கள் தயாராக இருப்பதாக தலிபான் பயங்கரவாதிகள் தெரிவித்தனர்.
மேலும், ஆப்கானிஸ்தானில் அண்மைக் காலமாக தாங்கள் நடத்தி வரும் பயங்கரவாதத் தாக்குதல்களையும் அவர்கள் நியாயப்படுத்தியுள்ளனர்.
இதுகுறித்து தலிபான் பேச்சுவார்த்தைக் குழுத் தலைவர் ஷேர் முகமது அப்பாஸ் ஸ்டானிக்ஸாய் கூறியதாவது: அமைதிப் பேச்சுவார்த்தையை அமெரிக்காதான் முறித்துக் கொண்டது. எங்களைப் பொருத்தவரை, பேச்சுவார்த்தைக்காக எங்களது கதவுகள் எப்போதும் திறந்தே உள்ளன.
பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும்போதே தலிபான்களுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கைகளை அமெரிக்கா மேற்கொண்டு வந்தது.
அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நேரத்தில் ஆயிரக்கணக்கான தலிபான்களை கொன்றதாக அமெரிக்காவே ஒப்புக் கொண்டுள்ளது.
எனவே, ஒருபுறம் அமைதிப் பேச்சுவார்த்தையை நடத்திக் கொண்டே, மறுபுறம் எங்களது போராட்டத்தை நாங்கள் தொடர்வதில் எந்தத் தவறும் இல்லை என்றார் அவர்.
ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்துவதற்காக அமெரிக்காவுக்கும், தலிபான்களுக்கும் இடையே கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்று வந்த பேச்சுவார்த்தையில் ஒப்பந்தம் ஏற்படும் சூழல் உருவானது.
எனினும், காபூலில் அமெரிக்கத் தூதரகம் அமைந்துள்ள பகுதியில் தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் அமெரிக்க வீரர் உள்பட 12 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, தலிபான்களுடனான பேச்சுவார்த்தை முறிந்துவிட்டதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.
இந்த நிலையில், தலிபான் பேச்சுவார்த்தைக் குழுத் தலைவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அரசு அலுவலகத்தில் தாக்குதல்
ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹார் மாகாணத் தலைநகர் ஜலாலாபாதிலுள்ள அரசு அலுவலகத்தில் புதன்கிழமை தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
ஜலாலாபாதிலுள்ள அரசு அலுவலகத்துக்குள் நுழைந்த பயங்கரவாதி, தனது உடலில் பொருத்தியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தார்.
அதனைத் தொடர்ந்து, மேலும் சில பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டவாறே அந்த அலுவலகத்துக்குள் நுழைந்தனர்.
அதையடுத்து, அங்கு விரைந்த பாதுகாப்புப்  படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே சண்டை மூண்டது. அதையடுத்து, அந்தப் பகுதியிலிருந்தவர்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி ஓடினர்.
இந்தச் சம்பவத்தில் 12 பேர் காயமடைந்தனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
அதிபர் அஷ்ரஃப் கனி பங்கேற்ற தேர்தல் பிரசாரக் கூட்டம் மற்றும் அமெரிக்கத் தூதரகம் அருகே தலிபான் பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை நடத்திய பயங்கரவாதத் தாக்குதல்களில் 48 பேர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில், தலிபான், இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்.) ஆகிய இரு பயங்கரவாத அமைப்புகளுக்குமே ஆதரவு காணப்படும் ஜலாலாபாதில் தற்போது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com