பின்லாந்து தலைவர்களுடன் ஜெய்சங்கர் சந்திப்பு: பயங்கரவாதத்தை ஒடுக்குவது குறித்து பேச்சுவார்த்தை

பின்லாந்து சென்றுள்ள வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், அந்நாட்டின் முக்கியத் தலைவர்களுடன் பயங்கரவாதத்தை ஒடுக்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
பின்லாந்து தலைவர்களுடன் ஜெய்சங்கர் சந்திப்பு: பயங்கரவாதத்தை ஒடுக்குவது குறித்து பேச்சுவார்த்தை
Updated on
1 min read

பின்லாந்து சென்றுள்ள வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், அந்நாட்டின் முக்கியத் தலைவர்களுடன் பயங்கரவாதத்தை ஒடுக்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
3 நாள் அரசுமுறைப் பயணமாக, பின்லாந்து சென்றுள்ள ஜெய்சங்கர், தலைநகர் ஹெல்சின்கியில் அந்நாட்டு பிரதமர் ஆண்ட்டி ரினி, வெளியுறவுத் துறை அமைச்சர் பெக்கா ஹாவிஸ்டோ ஆகியோரை வெள்ளிக்கிழமை சந்தித்து இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அமைச்சர் ஜெய்சங்கரும், ஹாவிஸ்டோவும் பயங்கரவாதத்தை ஒடுக்குவது குறித்தும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத பசுமை தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது குறித்தும் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். 
பின்னர், அங்குள்ள சர்வதேச விவகாரங்களுக்கான கல்வி நிறுவனத்தில், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை  பற்றிய கருத்தரங்கில் ஜெய்சங்கர் கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் பேசியதாவது:
நாட்டின் பாதுகாப்புக் காரணங்களுக்காகவே, ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வதற்கு இந்தியா முடிவு செய்தது. சர்வதேச அளவிலான பயங்கரவாதத்தின் மையம், இந்தியாவின் அண்டை நாட்டில் (பாகிஸ்தான்) உள்ளது. அந்த நாட்டிடம் இருந்து, பாதுகாப்பு சவால்களை இந்தியா எதிர்கொண்டுள்ளது. அவற்றில் முக்கியமானது எல்லை தாண்டிய பயங்கரவாதம். இதை இந்தியா பல ஆண்டுகளாக எதிர்கொண்டு வருகிறது. எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் கடந்த 30 ஆண்டுகளில் 40,000 பேரை இந்தியா இழந்திருக்கிறது. 
அனைத்து வடிவிலான பயங்கரவாதத்தையும் இந்தியா எதிர்த்து வருகிறது. எந்தவொரு நாடும் பயங்கரவாதத் தாக்குதலை எதிர்கொள்ளும்போது தக்க பதிலடி கொடுக்கும். அதை இந்தியா சமீப காலங்களில் செய்து வருகிறது. ஜம்மு-காஷ்மீரின் வளர்ச்சி, தேசத்தின் பாதுகாப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு அந்த மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்தது. பயங்கரவாதத்தின் மையம், அண்டைநாடுதான் என்பதை உணர்ந்து இந்தியா தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இந்தியா மட்டுமன்றி, ஒட்டுமொத்த உலக நாடுகளின் நலனுக்காகவும் இந்தியா குரல் கொடுத்து வருகிறது.
கடந்த காலங்களைப் போல் இல்லாமல், பயங்கரவாதத்தை ஆதரிப்பது, அதற்கு நிதியுதவி அளிப்பது, பயங்கரவாதத்தை தூண்டுவது போன்ற சவால்களுக்கு அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் நாம் வளர்ச்சியடைய முடியும்.
இந்தியாவில் நோக்கியா, வர்ட்சிலா உள்பட 100க்கும் மேற்பட்ட பின்லாந்து நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. உலக நாடுகள் அனைத்தும் அறிவுசார்ந்த பொருளாதாரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன. இந்த வேளையில், இரு நாடுகளும் தங்களது வலிமையை பரஸ்பரம் பயன்படுத்தி பொருளாதாரத்தை வலுப்பெறச் செய்ய முடியும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com