"தனிநபரால் எந்தவொரு முடிவையும் எடுக்க முடியாது": ப. சிதம்பரத்துக்கு ஆதரவுக்கரம் நீட்டும் மன்மோகன்

நமது அரசினுடைய அமைப்பில், ஒரு தனிநபரால் எந்தவொரு முடிவையும் எடுக்க முடியாது என்று முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். 
கோப்புப்படம்
கோப்புப்படம்


நமது அரசினுடைய அமைப்பில், ஒரு தனிநபரால் எந்தவொரு முடிவையும் எடுக்க முடியாது என்று முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். 

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் தற்போது நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் இன்று சிதம்பரத்தை திகார் சிறையில் சந்தித்தனர்.

இந்நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காங்கிரஸ் கட்சி சார்பாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,  

"ப. சிதம்பரம் தொடர்ந்து காவலில் இருப்பது வருத்தமளிக்கிறது. நமது அரசினுடைய அமைப்பில், ஒரு தனிநபரால் எந்தவொரு முடிவையும் எடுக்க முடியாது. அனைத்து முடிவுகளும், ஒருங்கிணைந்த முடிவுகள்தான். அரசின் 6 செயலர்கள் உட்பட மொத்தம் 12 அதிகாரிகள் ஆய்வு செய்த பிறகுதான் அதை முன்மொழிந்துள்ளனர். ஒருமித்த பரிந்துரைகளின் பேரில் அமைச்சர் சிதம்பரம் அதற்கு ஒப்புதல் அளித்துள்ளார். 

அதிகாரிகள் தவறு இழைக்கவில்லை எனும் பட்சத்தில், அந்த பரிந்துரைகளுக்கு வெறும் ஒப்புதல் மட்டுமே அளித்த அமைச்சர் குற்றம் செய்தவராக குற்றம்சாட்டப்படுவது புரிதலுக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது. ஒப்புதல் வழங்கியதற்கு அமைச்சர் மட்டும்தான் பொறுப்பு என்றால், அது அரசின் ஒட்டுமொத்த அமைப்பையே தகர்த்துவிடும். 

இந்த வழக்கில் நீதிமன்றங்கள் நீதியை நிலைநாட்டும் என்று நாங்கள் மிகுந்த மன உறுதியுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com