பயங்கரவாதத்துக்கு எதிராகப் போர்

"பயங்கரவாதத்துக்கு எதிராக உறுதியான போரை மேற்கொள்ள வேண்டும்' என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்னிலையில் பிரதமர் நரேந்திர மோடி அறைகூவல் விடுத்தார்.
நியூயார்க்கில் நடைபெற்ற மோடி நலமா நிகழ்ச்சியில் உரையாற்றும் பிரதமர் நரேந்திர மோடி.
நியூயார்க்கில் நடைபெற்ற மோடி நலமா நிகழ்ச்சியில் உரையாற்றும் பிரதமர் நரேந்திர மோடி.
Published on
Updated on
4 min read

"பயங்கரவாதத்துக்கு எதிராக உறுதியான போரை மேற்கொள்ள வேண்டும்' என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்னிலையில் பிரதமர் நரேந்திர மோடி அறைகூவல் விடுத்தார்.

மேலும், பாகிஸ்தானை மறைமுகமாக சாடிய அவர், "பயங்கரவாதத்தை ஆதரிப்போருக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்' என்றும் வலியுறுத்தினார்.

ஐ.நா. பொதுச் சபையின் 74}ஆவது ஆண்டுக் கூட்டத்தின் பொது விவாதம் வரும் 24}ஆம் தேதி தொடங்கி 30}ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இக்கூட்டத்தில், பிரதமர் மோடி உரையாற்றவிருக்கிறார். இதையொட்டி, ஒரு வார கால அரசுமுறை பயணமாக அவர் அமெரிக்காவுக்கு சென்றுள்ளார்.

இப்பயணத்தின் முக்கிய நிகழ்வாக, டெக்சாஸ் மாகாணம், ஹூஸ்டன் நகரிலுள்ள என்ஆர்ஜி மைதானத்தில் இந்திய}அமெரிக்கர்கள் சுமார் 50 ஆயிரம் பேர் கலந்துகொண்ட "மோடி நலமா' (ஹெளடி மோடி) எனும் பிரம்மாண்ட நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தியா, அமெரிக்கா மட்டுமன்றி, உலகம் முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்த நிகழ்ச்சியில், பிரதமர் மோடியும், அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் ஒரே மேடையில் உரையாற்றினர்.

முன்னதாக, தேசிய கீதத்துடன் தொடங்கிய "மோடி நலமா' நிகழ்ச்சியில், இந்திய}அமெரிக்க கலைஞர்கள் சுமார் 400 பேர் இசை மற்றும் நடனம் நிகழ்த்தினர். இந்திய-அமெரிக்கர்கள் இடையேயான பன்முகத் தன்மையை வெளிப்படுத்தும் வகையில் பல்லூடக காட்சிகளும் இடம்பெற்றன. பின்னர், பிரதமர் நரேந்திர மோடி மேடையேறியபோது, "மோடி, மோடி' என்ற கோஷத்தால் மைதானமே அதிர்ந்தது. பின்னர், அனைத்து திசைகளிலும் திரும்பி, நிகழ்ச்சிக்கு வந்திருந்த இந்திய வம்சாவளியினரை சிரம் தாழ்த்தி, கைகூப்பி வணங்கினார். பின்னர், அதிபர் டிரம்ப்பின் கையைப் பிடித்து, பிரதமர் மோடி மேடைக்கு அழைத்து வந்தார். இதைத் தொடர்ந்து, டிரம்ப்பை வரவேற்று, மோடி பேசியதாவது:

இந்தியா மற்றும் உலகெங்கும் உள்ள இந்தியர்களுக்கு வாழ்த்துகள். நண்பர்களே, மிக விசேஷமான நபர் (டிரம்ப்) இப்போது நம்முடன் இருக்கிறார். அவரது பெயர், இந்த உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் பிரசித்தமானது. உலக அரசியலில் நடைபெறும் ஒவ்வொரு விவாதங்களிலும் அவரது பெயர் இடம்பெறாமல் இருக்காது. உலக அளவில் அரசியல் தொடங்கி பொருளாதாரம், பாதுகாப்பு வரை அவரது ஆழமான தாக்கம் இருக்கும்.

"மீண்டும் டிரம்ப் அரசு': டிரம்ப்பை முதல்முறையாக வெள்ளை மாளிகையில் நான் சந்தித்தபோது, "வெள்ளை மாளிகையில் இந்தியாவுக்கு உண்மையான நண்பர் கிடைத்திருக்கிறார்' என்று கூறினார். அதனை மெய்ப்பிக்கும் வகையில், டிரம்ப் இந்த நிகழ்வில் பங்கேற்றிருக்கிறார்.

இரு நாடுகளின் மக்களுக்கு இடையிலான தொடர்பு இதயப்பூர்வமானது. இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பில் புதிய உச்சத்தை கண்டு வருகிறோம். அமெரிக்காவின் பொருளாதாரத்தை டிரம்ப் மீண்டும் வலுப்படுத்தியுள்ளார். அமெரிக்கா மற்றும் இந்த உலகுக்காக அவர் சாதித்தவை ஏராளம். அடுத்தும் டிரம்ப் அரசுதான் அமையும் என்றார் மோடி.

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெறவிருக்கும் சூழலில், பிரதமர் மோடி இவ்வாறு கூறியுள்ளார்.

பயங்கரவாதத்தை ஆதரிப்போருக்கு எதிராக நடவடிக்கை: மோடி நலமா நிகழ்ச்சியில், அதிபர் டிரம்ப் பேசிய பிறகு, பிரதமர் மோடி மீண்டும் உரையாற்றினார். அப்போது, அவர் கூறியதாவது:

நியூயார்க் இரட்டை கோபுர தாக்குதல், மும்பை தாக்குதலின் சதிகாரர்கள் எங்கிருந்து வந்தனர்? பயங்கரவாதத்தை ஆதரிப்போருக்கு எதிராக உறுதியான போரை முன்னெடுக்க வேண்டிய தருணத்தில் உள்ளோம்.

ஜம்மு}காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த அரசமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவு, அங்கு பயங்கரவாதத்தையும் பிரிவினைவாதத்தையும் ஊக்குவித்து வந்தது. அதனை நீக்கியதன் மூலம் அப்பிராந்தியத்தில் வளர்ச்சியும், வளமையும் உருவாக வழி ஏற்பட்டுள்ளது. இந்த முடிவு, இந்திய நாடாளுமன்றத்தின் மூன்றில் இருபங்கு ஆதரவுடன் எடுக்கப்பட்டுள்ளது. (அப்போது மைதானத்தில் இருந்தவர்கள் கரவொலி எழுப்பினர்).

தங்களது சொந்த நாட்டை நிர்வகிக்க தெரியாதவர்கள் (பாகிஸ்தான்), ஜம்மு}காஷ்மீர் தொடர்பான இந்தியாவின் முடிவால் நிம்மதியிழந்துள்ளனர். பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு அதிபர் டிரம்ப்  ஆதரவு அளித்து வருகிறார் என்றார் மோடி. 

இந்தியாவுக்கு புதிய கௌரவம்

ஹூஸ்டனில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பங்கேற்ற "மோடி நலமா?' நிகழ்ச்சியின் பின்னணியில் இந்திய}அமெரிக்க தேசியக் கொடிகளுடன் இணைந்த அதிபர் இலச்சினை காணப்பட்டது.

பொதுவாக, அமெரிக்க அதிபர் எந்த நிகழ்ச்சியில் பங்கேற்றாலும் அதிபருக்கான இலச்சினைதான் அங்கு வைக்கப்படும். இதற்கு மாறாக, மோடி நலமா நிகழ்ச்சியில் அமெரிக்கா, இந்தியா ஆகிய இரு நாட்டுக் கொடிகளுடன் கூடிய புதிய அதிபர் இலச்சினை வைக்கப்பட்டிருந்தது பலரையும் இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இது இந்தியாவுக்கு அமெரிக்கா அளித்த கௌரவம் என்று கருதப்படுகிறது.

மோடியிடம் ஹூஸ்டன் நகர சாவி ஒப்படைப்பு: "மோடி நலமா?' (ஹெளடி மோடி) நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஹூஸ்டன் நகருக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்த நகரின் சாவிகளை நகரின் மேயர் ஒப்படைத்தார். இந்த நிகழ்ச்சியில் மோடியை வரவேற்ற பின், ஹூஸ்டன் நகர சாவிகளை மோடியிடம் மேயர் சில்வஸ்டர் டர்னர் வழங்கினார். அப்போது அவர் பேசுகையில் "அமெரிக்காவிலேயே மிகவும் பன்முகத்தன்மை வாய்ந்த நகரம் ஹூஸ்டன். இங்கு "நலமா?' என்ற வார்த்தையை நாம் 140 மொழிகளில் கூறுகிறோம்' என்று குறிப்பிட்டார். அமெரிக்காவில் சில குறிப்பிட்ட பிரபலங்களையும், தலைவர்களையும் கௌரவிக்க விரும்பும் நகரங்கள் தங்கள் நுழைவாயிலின் சாவியை அவர்களிடம் வழங்குவது என்ற மரபைப் பின்பற்றுவது வழக்கமாகும். 

"மோடி நலமா?' நிகழ்ச்சியில் 24 மாகாண ஆளுநர்களும் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

இந்தியா-அமெரிக்காவுக்கு எல்லைப் பாதுகாப்பு மிக முக்கியம்: டிரம்ப்

"மோடி நலமா' நிகழ்ச்சியில், அதிபர் டிரம்ப் இந்திய - அமெரிக்கர்கள் மத்தியில் சுமார் 25 நிமிடங்கள் உரையாற்றினார். அப்போது, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு மேற்கொண்டு வரும் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் பெரிதும் பாராட்டத்தக்கவை என்று குறிப்பிட்ட அவர், இரு நாடுகளுக்கும் எல்லை பாதுகாப்பு மிக முக்கியமானது என்றார்.

டிரம்ப் மேலும் பேசியதாவது:

பிரதமர் மோடி சிறந்த மனிதர், சிறந்த தலைவர், எனது சிறந்த நண்பர். அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் (பிரதமர் மோடி கடந்த 17}ஆம் தேதி தனது 69}ஆவது பிறந்த நாளை கொண்டாடினார்). இந்தியாவில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு மேற்கொண்டு வரும் பொருளாதார சீர்திருத்தங்கள் பெரிதும் பாராட்டத்தக்கவை. பிரதமர் மோடியின் மிகச் சிறந்த பணிகள் காரணமாகவே அவருக்கு மக்கள் பெருவாரியாக வாக்களித்துள்ளனர். 

இந்தியாவிலும், அமெரிக்காவிலும் முன்னெப்போதும் இல்லாத அளவில் இப்போது மக்களின் வாழ்வு வளமடைந்துள்ளது. அதிகாரத்துவத்தை கட்டுப்படுத்தியதே இதற்கு காரணம்.

அடிப்படைவாத இஸ்லாமிய பயங்கரவாத அச்சுறுத்தலில் இருந்து, அப்பாவி பொதுமக்களை பாதுகாக்க வேண்டும் என்பதில் இந்தியாவும், அமெரிக்காவும் உறுதியாக உள்ளன. நாட்டின் எல்லைகளை பாதுகாப்பது மிகவும் முக்கியம் என்பதை இருநாடுகளும் உணர்ந்துள்ளன (டிரம்ப் இவ்வாறு பேசியபோது மோடி உற்சாகத்துடன் கைதட்டி வரவேற்றார்). அமெரிக்காவைப் பொருத்தவரை, தென் எல்லையை பாதுகாப்பதில் முன்னெப்போதும் இல்லாத நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாதுகாப்புத் துறையில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்காக, விரைவில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. இரு நாடுகளின் முப்படைகளும் பங்கேற்கும் "டைகர் டிரையம்ப்' கூட்டு பயிற்சி நவம்பரில் நடைபெறவிருக்கிறது என்றார் டிரம்ப்.

மேலும், தன்னைத் தவிர இந்தியாவுக்கு உண்மையான நண்பர் இருக்க முடியாது என்று குறிப்பிட்ட அவர், இந்திய}அமெரிக்கர்களின் பங்களிப்பையும் பாராட்டி பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com