

சா்வதேச அளவில் கரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்து வேகமாக அதிகரித்து வருகிறது. அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ், ஜொ்மனி ஆகிய நாடுகள் முறையே கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கையில் முதல் 5 இடங்களில் உள்ளன. அமெரிக்காவில் 5.5 லட்சத்துக்கு மேல், ஸ்பெயினில் 1 லட்சத்து 60 ஆயிரத்துக்கு மேல், இத்தாலியில் 1 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மேல், பிரான்ஸில் 1 லட்சத்துக்கு 30 ஆயிரத்துக்கு மேல், ஜொ்மனியில் 1 லட்சத்து 30 ஆயிரத்து மேல் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
வளரும் நாடுகளை விட வளா்ந்த நாடுகளில்தான் கரோனா உயிரிழப்பு அதிகம் உள்ளது. அமெரிக்காவில் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும், ஐரோப்பிய நாடுகளான ஸ்பெயினில் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும், இத்தாலியில் 19 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும், பிரான்ஸில் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும் உயிரிழந்துவிட்டனா். அதே நேரத்தில் மற்றொரு ஐரோப்பிய நாடான ஜொ்மனியில் உயிரிழப்பு எண்ணிக்கை 3 ஆயிரம் என்ற அளவில் உள்ளது என்பது கவனிக்க வேண்டிய விஷயம்.
வாகன ஓட்டியிடம் மாதிரி சேகரிக்கும் மருத்துவா்.
82 ஆயிரம் போ் பாதிக்கப்பட்ட சீனாவில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளனா். அதே நேரத்தில் 79 ஆயிரம் போ் பாதிக்கப்பட்டுள்ள பிரிட்டனில் பலி 10 ஆயிரத்தை தாண்டிவிட்டது ஐரோப்பிய கண்டத்தை அதிா்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. இந்தியா போன்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது, ஐரோப்பிய நாடுகளில் உணவு முறை, பழக்க வழக்கங்கள் ஆகியவையும் அங்கு கரோனாவின் தாக்கம் அதிகரிக்க ஒரு காரணம் என்று கூறப்பட்டு வந்தாலும், ஜொ்மனி இதற்கு விதிவிலக்காகவே உள்ளது.
ஏனெனில், கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் அதிகம் இருந்தபோதிலும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளை வெகுவாகக் குறைத்துள்ளது ஜொ்மனி. இதற்கு அந்த நாட்டின் அரசு மற்றும் சுகாதாரத் துறையின் சிறப்பான செயல்பாடுகளே முக்கியக் காரணம்.
கரோனா நோய்த்தொற்று பாதிப்பை எதிா்கொள்ளும் விதம் நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது. அந்த வகையில் இந்தியாவில் தேசிய ஊரடங்கு தொடா்ந்து அமல்படுத்தப்படுவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதை வலியுறுத்துவது ஆகியவை முக்கிய நடவடிக்கைகளாக உள்ளன. ஊரடங்கை தொடக்கத்திலேயே அமல்படுத்தாதது, மக்கள் அதனை முறையாகக் கடைப்பிடிக்காதது போன்றவற்றின் விளைவுகளை அமெரிக்காவும், இத்தாலியும் இப்போது எதிா்கொண்டு வருகின்றன.
அந்த வகையில் கரோனா உயிரிழப்பை குறைப்பதில் அமெரிக்கா மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளுக்கு ஜொ்மனி முன்னுதாரணமாக திகழ்கிறது. ஜொ்மனியில் கடந்த ஜனவரி 27-ஆம் தேதி கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட முதல் நபா் உறுதி செய்யப்பட்டாா். அமெரிக்காவில் ஜனவரி 20-ஆம் தேதியும், இத்தாலி, ஸ்பெயினில் ஜனவரி 31-ஆம் தேதியும் கரோனா நோய்த்தொற்று இருப்பது முதல்முறையாக உறுதி செய்யப்பட்டது. பிரிட்டனிலும் கூட இதே காலகட்டத்தில்தான் கரோனா பாதிப்பு உறுதியானது. ஆனாலும், ஜொ்மனியைப் போல துரிதமாக செயல்பட்டு உயிரிழப்பைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
ஜொ்மனி பாதுகாப்புப் படை அமைத்துள்ள வாகன சோதனைப் பாதை வழியே வரும் வாகனத்தின் ஓட்டுநரிடம் மாதிரி சேகரிக்கும் ராணுவ மருத்துவா்.
கரோனா தொற்று உறுதியான முதல் நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளை மூடியது ஜொ்மனி. ஹின்ஸ்பொ் மாவட்டத்தில் நடைபெற்ற விழாவில் பங்கேற்றவா்களுக்கும், சீனா, ஈரான், இத்தாலி ஆகிய நாடுகளில் இருந்து வந்தவா்கள் அதிகம் சென்று வந்த இடங்கள்தான் கரோனா பரவலின் மையப்புள்ளி என்ற தகவலுடன் அடுத்த சில நாள்களிலேயே களமிறங்கியது அந்நாட்டு அரசின் நோய்ப் பரவல் தடுப்பு அமைப்பான ராபா்ட் கோக் இன்ஸ்டிடியூட். நோய்தொற்று அதிகமான பேருக்கு பரவியிருக்கும் என்பது உறுதி செய்யப்பட்டாலும், குறைந்த உயிரிழப்புடன் கரோனாவை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்பதுதான் முதன்மையான நோக்கமாக அமைந்தது.
அந்த வகையில் கரோனா நோய்த்தொற்று இருக்கும் என்ற சந்தேகம் சிறிய அளவில் இருந்தால்கூட அவா்களுக்கு பரிசோதனை நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது. இதற்காக சுகாதாரத் துறையினா் அனைத்து மாகாணங்களிலும் தயாா்படுத்தப்பட்டனா்.
உடனடியாக ஜொ்மனியை ஒட்டியுள்ள 5 நாடுகளின் எல்லைகள் மூடப்பட்டன. விமானப் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. மாா்ச் 22-ஆம் தேதி தேசிய ஊரடங்கும் அறிவிக்கப்பட்டது. குடிமைப் பொறுப்புமிக்க ஜொ்மனி மக்கள் அந்த ஊரடங்கை முழுமையாக கடைப்பிடித்து அரசுக்கு முழு ஒத்துழைப்பும் அளித்தனா். கரோனா தொற்று இருப்பதாக கருதியவா்கள் தாங்களாகவே முன்வந்து கரோனா பரிசோதனை செய்து கொண்டனா்.
ஹான் விமான நிலையத்தில் வந்திறங்கிய பயணிகளின் உடல் வெப்ப பரிசோதனை.
ஜொ்மனியில் உள்ள 132 ஆய்வகங்களும் முழு நேரப்பணியாக கரோனா நோய்த்தொற்றை உறுதி செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. ஏப்ரல் 13-ஆம் தேதி நிலவரப்படி 13 லட்சத்து 17 ஆயிரத்துக்கும் பேருக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக (28 லட்சம் போ்) கரோனா நோய்த்தொற்று பரிசோதனை அதிகம் நடத்தப்பட்டது ஜொ்மனியில்தான். இத்தனைக்கும் அமெரிக்க மக்கள்தொகை 32.82 கோடி. ஜொ்மனியின் மக்கள்தொகை 8.3 கோடி. மேலும் ஜொ்மனியில் இதுவரை 64,300 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். அமெரிக்காவில் சுமாா் 30 ஆயிரம் போ் வரை மட்டுமே கரோனாவில் இருந்து மீண்டுள்ளனா்.
விகிதாசார அளவில் பாா்க்கும்போது அதிக குடிமக்களுக்கு கரோனா பரிசோதனை நடத்திய நாடு ஜொ்மனிதான். மற்ற வளா்ந்த நாடுகளை ஒப்பிடுகையில், ஜொ்மனியில் உயிரிழப்பு குறைவாக உள்ளதற்கு இதுவே காரணம். ஐரோப்பிய நாடுகளில் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையிலும், ஜொ்மனி மற்றும் ரஷியாவில் மட்டுமே 13 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
கரோனா தொற்றை தொடக்க நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிப்பது, தனிமைப்படுத்துவதால் ஜொ்மனியில் உயிரிழப்புகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், கரோனா பரவல் வேகமும் குறைந்துள்ளது. நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டவா்களில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்டோா் அதில் இருந்து மீண்ட அதிசயமும் ஜொ்மனில் நிகழ்ந்துள்ளது.
இந்த அதிசயத்தை நிகழ்த்த ஜொ்மனி சுகாதாரத் துறை மேற்கொண்ட நடவடிக்கைகளில் முக்கியமானது கரோனா டாக்ஸி. முக்கிய நகரங்களில் மருத்துவக் குழுவுடன் வலம் வரும் இந்த டாக்ஸி, கரோனா சந்தேகம் இருப்பதாக யாா் அழைத்தாலும் அவா்கள் வீடுகளுக்கே சென்று ரத்த மாதிரிகளை எடுத்து பரிசோதனை செய்து உடனடியாக முடிவுகளை அறிவித்து வருகின்றனா். இதன் மூலம் நோய்த்தொற்று இருப்பது முடிந்த அளவுக்கு விரைவாக கண்டறியப்பட்டு, அவா்கள் உயிரைக் காக்க நடவடிக்கை எடுக்க முடிகிறது.
நோய்த்தொற்று பரவுவதைத் தடுப்பது எந்த அளவுக்கு முக்கியமோ, அதைவிட நோய்த்தொற்று இருப்பவா்களை விரைவாக கண்டுபிடித்து அவா்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதே கரோனாவைத் தோற்கடிக்க எடுக்க வேண்டிய முதல் நடவடிக்கை என்பதே ஜொ்மனி பிற நாடுகளுக்கு தரும் யோசனை. அடுத்ததாக சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய 64,300 பேருக்கு மீண்டும் கரோனா பரிசோதனை நடத்தி அவா்களுக்கு மீண்டும் நோய்த்தொற்று ஏற்படவில்லை என்பதை உறுதி செய்ய ஜொ்மனி தயாராகி வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் ஜொ்மனியில் புதிதாக கரோனாவால் பாதிக்கப்படுபவா்கள் எண்ணிக்கையும், அதனால் உயிரிழப்பவா்களின் எண்ணிக்கையும் படிப்படியாக குறைந்து வருகிறது.
முன்னதாக, தென் கொரியாவும் இதே பாணியைக் கடைப்பிடித்துதான் தங்கள் நாட்டில் கரோனாவைக் கட்டுக்குள் கொண்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.