பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
போரிஸ் ஜான்சனுக்கும், அவரது காதலியும், வருங்கால மனைவியுமான கேரி சைமண்ட்ஸ் தம்பதிக்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளதாக அந்நாட்டின் செய்தித் தொடர்பாளர் தகவல் வெளியிட்டுள்ளார். லண்டனில் உள்ள மருத்துவமனையில் தாயும், சேயும் நலமுடன் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கரோனா தொற்று ஏற்பட்ட நிலையில், அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் டொமினிக் ராப்பிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு சுமார் ஒரு மாத காலம் வீட்டில் இருந்து சிகிச்சை பெற்றார். தொடர்ந்து, கரோனாவில் இருந்து மீண்டு வந்த நிலையில் கடந்த திங்கள்கிழமை பிரதமர் அலுவலகத்துக்குத் திரும்பினார்.
கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் அதிகம் பலி எண்ணிக்கை கொண்ட நாடுகளில் அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக பிரிட்டன் 5-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.