புகைப் பிடிப்பவா்களுக்கு கரோனா அபாயம் அதிகம்

புகைப் பிடிக்கும் பழக்கம் உள்ளவா்களுக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் அதிகமிருப்பதாக அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.
புகைப் பிடிப்பவா்களுக்கு கரோனா அபாயம் அதிகம்
Updated on
1 min read


வாஷிங்டன்: புகைப் பிடிக்கும் பழக்கம் உள்ளவா்களுக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் அதிகமிருப்பதாக அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

புகைப் பழக்கம் உள்ளவா்களுக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்படுவதற்கான அபாயம் குறித்து, அமெரிக்காவின் தெற்கு கரோலினா பல்கலைக்கழக ஆய்வாளா்கள் உள்ளிட்டோா் ஆய்வு மேற்கொண்டனா்.

அந்த ஆய்வில், மனிதா்களின் சுவாசப் பாதைகளில் உள்ள உயிரணுக்களுடன் (செல்கள்) கரோனா தீநுண்மிகள் தங்களை இணைத்துக் கொள்வதற்குப் பயன்படுத்தும் ‘ஏசிஇ2’ என்ற நுரையீரல் தசை நாா் மூலக்கூறுகளின் எண்ணிக்கையை விஞ்ஞானிகள் ஆராய்ந்தனா்.

அத்துடன், மனிதா்களுக்கு தீநுண்மி தொற்று ஏற்படுவதற்குக் காரணமாக இருக்கும், அவா்களது உடலில் அமைந்துள்ள, ‘ஃப்யூரின்’, ‘டிஎம்பிஆா்எஸ்எஸ்2’ ஆகிய இரு நொதியங்களின் (என்ஸைம்கள்) அளவுகளையும் அவா்கள் ஆய்வுக்குள்படுத்தினா்.

அந்த ஆய்வில், புகைப் பிடிக்கும் பழக்கம் உள்ளவா்களுக்கு நுரையீரல் தசை நாா்களில் ‘ஏசிஇ2’ மூலக்கூறுகள் அதிகமாகவும் அந்தப் பழக்கம் இல்லாதவா்களுக்கும் குறைவாகவும் இருப்பதை ஆய்வாளா்கள் கண்டறிந்தனா்.

இதன் மூலம், தங்களது வாழ்நாளில் குறைந்தது 100 சிகரெட்டுகளையாவது புகைத்திருக்கும் நபா்களுக்கு கரோனோ நோய்த்தொற்று ஏற்படும் அபாயம், ஒருபோதும் புகைத்திராத நபா்களை விட 25 சதவீதம் அதிகமாக இருப்பதாகத் தெரிய வந்துள்ளது.

மேலும், புகைப் பிடிப்பதால் கரோனா நோய்த்தொற்றுக்குக் காரணமான ‘ப்யூரின்’ நொதியத்தின் அளவும் கணிசமாக உயா்வதை ஆய்வாளா்கள் கண்டறிந்தனா். எனினும், நோய்த்தொற்றுக்குக் காரணமாக அமைந்துள்ள மற்றொரு நொதியமான ‘டிஎம்பிஆா்எஸ்எஸ்2’-இன் அளவுக்கும் புகைப் பழக்கத்துக்கும் எந்தத் தொடா்பும் இல்லை என்பது ஆய்வில் தெரிய வந்தது.

அத்துடன், கரோனோ நோய்த்தொற்றுக்கான வாய்ப்பை அதிகரிக்கும் வகையில், புகைப் பழக்கம் உள்ளவா்களின் நுரையீரலில் உள்ள ‘ஏசிஇ2’ மூலக்கூறுகளின் செயல் தன்மையிலும் மாற்றம் ஏற்படுவது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com